அத்தாட்சிப்படுத்தல் சேவைகளுக்கான மின்னியல் சந்திப்பு நியமன முறைமை

மின்னியல் சந்திப்பு நியமன முறைமையை எஸ்.எல்.டி. மொபிடெல் உடன் இணைந்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு 2022 செப்டெம்பர் 29ஆம் திகதி முதல் அறிமுகப்படுத்தவுள்ளது. இது கொன்சியூலர் அலுவல்கள் பிரிவின் சரிபார்ப்பு மற்றும் அத்தாட்சிப்படுத்தல் பிரிவில் சிறந்த மற்றும் பயனுள்ள சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு பொதுமக்களுக்கு வசதியளிப்பதாக அமையும்.

மின்னியல் சந்திப்பு நியமன முறைமையானது, கொன்சியூலர் அலுவல்கள் பிரிவு மற்றும் யாழ்ப்பாணம், திருகோணமலை, கண்டி, குருநாகல் மற்றும் மாத்தறையில் உள்ள அதன் பிராந்திய கொன்சியூலர் அலுவலகங்களில் ஆவணங்களை அத்தாட்சிப்படுத்துவதற்கான இணையவழி நியமனங்களை பொதுமக்கள் பெற்றுக் கொள்வதனை எளிதாக்கும்.

மின்னியல் சந்திப்பு நியமன சேவையைப் பெற விரும்புபவர்கள் 225 (கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்கள்) அல்லது 1225 (நிலையான அழைப்புத் தொலைபேசி பாவனையாளர்கள்) மற்றும் மொபிடெல் மின்னியல் சந்திப்பு (www.echannelling.com ) க்கு அழைத்து நியமனங்களைப் பெற்றுக் கொள்ளலாம். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம் (www.mfa.gov.lk ) ஊடாகவும் தொடர்பு கொள்ள முடியும்.

சேவைகளைப் பெற்றுக் கொள்ள விரும்புபவர்களை கொன்சியூலர் அலுவல்கள் பிரிவு மற்றும் அதன் பிராந்திய கொன்சியூலர் அலுவலகங்களின் அனைத்து அத்தாட்சிப்படுத்தல் பிரிவுகளும் 2022 செப்டம்பர் 29 முதல் மின்னியல் சந்திப்பு நியமன முறைமை மூலமாக மட்டுமே ஏற்றுக்கொள்ளும்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
கொழும்பு
2022 அக்டோபர் 02

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.