சதுரகிரி மலைப்பகுதியில் தீவிபத்து: பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

வத்திராயிருப்பு: சதுரகிரி கோயில் கிழக்குப்பகுதி மலையில் தீ பரவியதால், பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல வனத்துறையினர் அனுமதி மறுத்தனர். இதனால், நேற்று பக்தர்கள் ஏமாற்றம் அடைந்து திரும்பிச் சென்றனர்.  மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. புரட்டாசி பிரதோஷம், அமாவாசை மற்றும் நவராத்திரி விழாவை முன்னிட்டு, கடந்த மாதம் 23ம் தேதி முதல் வரும் 5ம் தேதி வரை 13 நாட்கள் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த செப்.26ம் தேதி சுந்தரமகாலிங்கம் கோயிலில் உள்ள ஆனந்த வள்ளியம்மனுக்கு நவராத்திரி திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அன்று முதல் தினசரி பக்தர்கள் சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு சென்று ஆனந்த வள்ளியம்மனை தரிசனம் செய்து வந்தனர். நேற்று அதிகாலை 3 மணி முதல் கோயிலுக்கு செல்ல தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு நூற்றுக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இவர்கள் தங்களை கோயிலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

அப்போது வனத்துறையினர், சுந்தர மகாலிங்கம் கோயில் கிழக்குப் பகுதியில் உள்ள மலைப்பகுதியில் தீ பரவி எரிந்து வருவதால், பக்தர்களை அனுமதிக்க முடியாது என தெரிவித்தனர்.
இதனால், 1 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

அனுமதியற்ற பாதையில் சென்ற 62 பேர் மீது வழக்கு
மதுரை மாவட்டம், பேரையூர் அருகே தும்மநாயக்கன்பட்டி மலையடிவாரத்திலிருந்து சிலர் சதுரகிரி கோயிலுக்கு சென்று வருகின்றனர். இந்த பாதைக்கு வனத்துறை அனுமதி வழங்கவில்லை. நேற்று முன்தினம் இரவு பக்தர்கள் மலையிலுள்ள மொட்டப்பெருமாள் கோயிலில் கிடாவெட்டு நடத்த இருந்தனர். அப்போது அந்த மலைப்பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

தகவலறிந்து சென்ற சாப்டூர் வனத்துறையினர் அங்கிருந்த பேரையூர், வன்னிவேலம்பட்டியைச் சேர்ந்த பக்தர்களை பேரையூரிலிலுள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்து விசாரணை செய்தனர். மேலும், வனப்பகுதிக்குள்  அனுமதியின்றி நுழைந்ததற்கு 62 பேர் மீது வழக்குப்பதிவு  செய்து, வரும் 14ம் தேதி சாப்டூர் வனச்சரக அலுவலகத்தில் ஆஜராகுமாறு கூறினர். அதனை தொடர்ந்து  நிபந்தனையின் கீழ் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.  தாசில்தார் ரவி, டிஎஸ்பி இலக்கியா உள்ளிட்ட வனத்துறையினர் தீ விபத்துக்காண காரணம் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.