ஐதராபாத்தில் 3 தீவிரவாதிகள் கைது: பாக். உளவு அமைப்புடன் தொடர்பு

திருமலை: ஐதராபாத்தில் தீவிரவாதிகளின் குண்டுவெடிப்பு சதியை போலீசார் முறியடித்து, சதியில் முக்கிய பங்காற்றிய பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. அமைப்புடன் தொடர்புடைய தீவிரவாதிகள் 3 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 4 கையெறி குண்டுகள், ரூ.5.40 லட்சத்தை பறிமுதல் செய்தனர். தெலங்கானா மாநிலம் ஐதராபாத், மலக்பேட்டையை சேர்ந்தவர் அப்துல் ஜாஹத். இவருக்கு கடந்த காலங்களில் தீவிரவாத தாக்குதல்கள் தொடர்பாக பல வழக்குகளில் தொடர்பு இருந்தது. இந்நிலையில்  பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ தீவிரவாத அமைப்புகளுடன்  மீண்டும் தனது தொடர்புகளை புதுப்பித்து குண்டுவெடிப்பு மற்றும் கொரில்லா தாக்குதல் உள்ளிட்ட பயங்கரவாத செயல்களுக்கு சதி செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் தெலங்கானா மாநிலம் முசாரம்பாக், சைதாபாத், சம்பாபேட், பாபாநகர், பிசல் பண்டா, சந்தோஷ் நகர், சிறப்பு தனிப்படை போலீசார், கிழக்கு மண்டலம், தெற்கு மண்டலம் மற்றும் அதிரடிப்படை போலீசார் கூட்டாக இணைந்து நேற்று முன்தினம்  நள்ளிரவு  சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் அப்துல் ஜாஹத் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து நான்கு கையெறி குண்டுகள் மூலம் ஐதராபாத்தில் பரபரப்பாக உள்ள இடத்தில் வெடி குண்டு தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியது தெரியவந்தது. இதையடுத்து,  மலக்பேட்டை சேர்ந்த அப்துல் ஜாஹத் என்கிற மோட்டு(39), சைதாபாத்தை சேர்ந்த சமியுதீன் என்கிற அப்துல்சமி(40), மெஹிதிப்பட்டினத்தை சேர்ந்த  மாஸ் ஹசன் பாரூக்(29) ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மூன்று பேரும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பொதுக்கூட்டங்கள், ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் மற்றும் பாஜவினர் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தானை சேர்ந்த ஐஎஸ்ஐ அமைப்பு மூலம் பயிற்சி பெற்றது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அப்துல் ஜாஹத்திடம் இருந்து இரண்டு கையெறி குண்டுகள், ரூ.3 லட்சத்து 91 ஆயிரத்து 800  மற்றும் 2 மொபைல் போன்களும், சமியுதீனிடம் இருந்து  ஒரு கையெறிகுண்டு, ரூ.1.50 லட்சம் மற்றும் ஒரு மொபைல் போன், ஒரு புல்லட் மோட்டார் சைக்கிள், மாஸ் ஹசனிடம் இருந்து ஒரு கையெறி குண்டு, 2 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.