புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:
கட்சியின் மூத்த மற்றும் இளைய தலைமுறையைச் சேர்ந்த தலைவர்கள் வலியுறுத்தியதன் காரணமாகவே காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த தேர்தலில் யாரையும் எதிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் நான் போட்டியிடவில்லை. கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என்பதே என் தலையாய நோக்கம். அதற்காக மட்டுமே காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் களமிறங்கியுள்ளேன். எனக்கு பின்னால் காந்தியின் குடும்பத்தினர் ஆதரவாக இருக்கின்றனர் என்பது தவறான கருத்து.
“ஒருவருக்கு, ஒரு பதவி” என்பது காங்கிரஸ் கட்சியின் கொள்கை. அதனை கடைபிடிக்கும் விதமாகவே காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கலின் போது மாநிலங்களவையின் எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜிநாமா செய்தேன். கட்சியில் சீர்த்திருத்தங்களை தனி ஒரு நபரால் மேற்கொள்ள முடியாது. தேர்தலுக்குப் பிறகு அனைவரும் ஒன்றிணைந்து கட்சியை வலிமைப்படுத்தும் முடிவுகள் எடுக்கப்படும்.
பாஜக அளித்த அனைத்து வாக்குறுதிகளும் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. ஏழை, பணக்காரருக்கான இடைவெளி வேகமாக அதிகரித்து வருகிறது. மேலும், பணவீக்கம் அதிகரிப்பு, வேலையில்லா திண்டாட்டப் பிரச்சினைகளுக்கும் இன்னும் தீர்வு காணப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் கார்கேவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள ஏதுவாக அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தீபேந்தர் ஹூடா, சையது நஸீர் ஹூசைன், கவுரவ் வல்லபா ஆகியோர் தங்களது செய்தித்தொடர்பாளர் பதவிகளை ராஜிநாமா செய்துள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் கே.என். திரிபாதியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து கார்கே மற்றும் சசி தரூர் இடையேயான நேரடிப் போட்டி உறுதியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.