புதுடில்லி, :மூத்த குடிமக்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள், அவற்றின் செயல்பாடு குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் ‘நோட்டீஸ்’ அனுப்பி உள்ளது.
முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும், காங்கிரசைச் சேர்ந்தவருமான அஸ்வனி குமார், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:நம் நாட்டில் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவர்களில் பெரும்பாலானோர் வறுமையில் வாடுகின்றனர்.
இருப்பிட வசதியின்றி திறந்தவெளிகளில் வசிக்கின்றனர்; உடுக்க உடைஇல்லை. எனவே, மூத்த குடிமக்களுக்காக நாடு முழுதும் போதிய சுகாதார கட்டமைப்பு வசதிகளுடன் காப்பகங்களை அமைக்கும்படி மத்திய – மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் அனிருந்தா போஸ், சுதான்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:மூத்த குடிமக்களுக்காக என்னென்ன நலத் திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன; எத்தனை முதியோர் காப்பகங்கள் உள்ளன என்பது பற்றிய விரிவான விபரங்களை, அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். இது தொடர்பாக, அனைத்து மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப் படுகிறது. இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஒத்திவைத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement