உடன்குடி: குலசேகரன்பட்டினம் கடற்கரையில் மகிஷாசூரனை சம்ஹாரம் செய்தார் முத்தாரம்மன். இதை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர். தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழவையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு சூரசம்ஹாரத்திற்காக சிம்ம வாகனத்தில் முத்தாரம்மன், கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோயில் முன் எழுந்தருளினார். அப்போது அபிஷேக மண்டபத்தில் இருந்து சூரனும் புறப்பட்டு கடற்கரை வளாகத்திற்கு வந்தார். தன் தலையுடன் வந்த சூரனை முத்தாரம்மன் ஈட்டியால் வதம் செய்தார். 12.05க்கு சூரனின் சிங்க தலையையும் 12.10க்கு எருமை தலையையும், தொடர்ந்து சேவல் தலையையும் வதம் செய்தார்.
அப்போது அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ஓம்காளி, ஜெய்காளி என்று முழங்கினர். சூரசம்ஹாரம் முடிந்தவுடன் நேற்று அதிகாலை 1 மணியளவில் கடற்கரை மேடையில் அம்மன் எழுந்தருளியதும் அபிஷேக ஆராதனை நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர். 12ம் திருவிழாவான இன்று அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, பாலாபிஷேகம் நடக்கிறது.
