சென்னை: ‘இந்து தமிழ் திசை’ – 2022 தீபாவளி மலரை, சென்னையில் துர்கா ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். முதல் பிரதியை தொழிலதிபர் நல்லி குப்புசாமி பெற்றுக்கொண்டார். இன்று முதல் கடைகளுக்கு விற்பனைக்கு வருகிறது. பிரத்யேக க்யூஆர் கோடு, வாட்ஸ்அப் எண் உள்ளிட்ட ஆன்லைன் வழியாகவும் தீபாவளி மலர் பெறுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்
பட்டுள்ளன.
‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் கடந்த 2013 முதல் தீபாவளி மலர் வெளியாகி வருகிறது. இந்த ஆண்டு தீபாவளி மலர், 260 பக்
கங்கள் கொண்டதாக பல்வேறு சிறப்புப் படைப்புகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆஸ்கர் நாயகன்’ ஏ.ஆர்.ரஹ்மான் திரைத்துறைக்கு வந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்ட கொண்டாட்டத் தருணம் குறித்து சினிமாப் பகுதி கட்டுரை விரிவாக அலசியுள்ளது. தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வரும் நாயகிகளின் தனித் தன்மையை அடையாளம் காட்டுகிறது மற்றொரு கட்டுரை. பிரபல இயக்குநர்களின் டெம்பிளேட் தன்மைகள், சமீபத்திய திரைப்படங்களில் ‘வைகைப் புயல்’ வடிவேலு நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்கிற கற்பனைகளுடன் சிரிக்க வைக்கின்றன நகைச்சுவைப் பகுதிக் கட்டுரைகள்.
தமிழகத்தின் பிரபல அம்மன் கோயில்கள், கிறிஸ்தவ சமயத்தின் மாலையம்மன், இஸ்லாத்தில் காலம் ஆகியவை குறித்த கட்டுரைகள் ஆன்மிகப் பகுதியில் இடம்பெற்றுள்ளன. தஞ்சை பெரிய கோயிலின் கலைச் சிறப்புகள், தனித்தன்மைகள் குறித்து வரலாற்று ஆய்வாளர்கள் அர.அகிலா, கோமகன், பெரிய கோயிலின் ஓவியச் சிறப்புகள் குறித்து வரலாற்று ஆய்வாளர் இரா. கலைக்கோவன் உள்ளிட்டோர் எழுதியிருக்கின்றனர்.‘மலைகளின் ராணி’ ஊட்டியின் வரலாறு, ஆலப்புழை கயாகிங் படகு பயணம், அருவிகள் நிறைந்த நெல்லியம்பதி ஆகிய பகுதிகளை படம்பிடித்துக் காட்டுகின்றன பயணம் பகுதிக் கட்டுரைகள். பிரபல சமையல் கலை நிபுணர் ராகேஷ் ரகுநாதனின் பேட்டி, ‘வேர்ல்டு பிரஸ் போட்டோ’ விருது பெற்ற ஒளிப்படக் கலைஞர் மதுரை செந்தில்குமரனின் ஒளிப்படக் கட்டுரை, திருக்குறுங்குடி கோயில் சிற்பங்கள் பற்றி பிரபல ஓவியர் சந்ருவின் விவரிப்பு ஆகியவை இடம் பெற்றுள்ளன.
இவற்றுடன் பிரபல எழுத்தாளர்கள் பாரததேவி, ஜி.எஸ்.எஸ்., மாத்தளை சோமு, கமலாலயன் ஆகியோரின் படைப்புகளும் இடம்பெற்றுள்ளன. மேலும் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ள தீபாவளி மலரை துர்கா ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். முதல் பிரதியை தொழிலதிபர் நல்லி குப்புசாமி பெற்றுக்கொண்டார். 260 பக்கங்கள் கொண்ட தீபாவளி மலரின் விலை ரூ. 150 ஆகும். இந்த தீபாவளி மலர் இன்று முதல் கடைகளுக்கு விற்பனைக்கு வருகிறது. வாசகர்களின் வசதிக்காக ஆன்லைன் மூலமும் புத்தகம் விநியோகிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான க்யூஆர் கோடு இந்த செய்தியிலேயே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் https://store.hindutamil.in/publications என்ற இணைய லிங்க்கை பயன்படுத்தியும், 9940699401 என்கிற வாட்ஸ்-அப் எண்ணிலும் பதிவு செய்துகொள்ளலாம்.