காம்பியாவில் 66 குழந்தைகள் இறப்பு: இருமல் மருந்து இலங்கையில் இறக்குமதி செய்யப்படவில்லை

 

காம்பியாவில் 66 குழந்தைகளின் மரணத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நான்கு இருமல் மருந்து வகைகள், இலங்கையில் இறக்குமதி செய்யப்படவில்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சில் நேற்று முன்தினம் (6) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இறக்குமதி செய்யப்படுகின்ற மருந்துகளை முகவர் நிலையங்கள் மிக கவனமான முறையில் இறக்குமதி செய்வதாகவும் மேலும் விளைவுகளை ஏற்படுத்தும் எவ்வித மருந்துகளைம் இறக்குமதி செய்யவில்லை எனவும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் மூலம் தீர்மானிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை, இலங்கை அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் மற்றும் மருந்து விநியோகப் பிரிவு ஆகியவற்றின் ஊடாக இவ் விடயம் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் பல்வேறு நாடுகளில் இருந்து நன்கொடையாக பெறப்பட்ட மருந்துகளை பரிசீலனை செய்ததாகவும் அவ்வாறான இருமல் மருந்துகள் நாட்டில் கண்டறியப்படவில்லை எனவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பு குறித்த இருமல் மருந்துகளின் பாவனை தொடர்பில் எச்சரிக்கைகளை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.