திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள முசுவனூத்து கிராமத்தில் வசித்து வருபவர் புலிகேசி (50). இவர் அரசு பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வேலை முடிந்து புலிகேசி வத்தலகுண்டு அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நின்று கொண்டிருந்தார்.
அப்போது மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமணன் (24) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் புலிகேசி மீது மோதியது. இந்த விபத்தில் புலிகேசி, லட்சுமணன் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். இதனால் ஓட்டுனர்களும், கண்டக்டர்களும் இணைந்து பணிமனையில் நின்று கொண்டிருந்த பேருந்தில் அவர்களை ஏற்றி வத்தலகுண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
இந்நிலையில் வத்தலகுண்டு காவல் நிலையம் அருகே பேருந்து சென்ற போது லட்சுமணன் தன்னை போலீசில் ஒப்படைத்து விடுவார்களோ என பயந்து லட்சுமணன் கீழே குதித்து ஓடினார். இதுகுறித்து அறிந்த போலீசார் பேருந்து நிலையத்திற்குள் லட்சுமணனை தேடியும் அவர் கிடைக்கவில்லை.
அப்போது பூட்டி இருந்த கடைக்கு முன் பகுதியில் லட்சுமணன் பதுங்கி இருந்தார். அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டும் போலீசாருக்கு பயந்து சிகிச்சை பெறாமல் இருந்ததால் அந்த இடத்திலேயே லட்சுமணன் பரிதாபமாக உயிரிழந்தார். மறுநாள் காலை கடையை திறப்பதற்காக சென்ற உரிமையாளர் வாலிபர் ரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சடைந்து போலீசருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் லட்சுமணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த புலிகேசிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.