நாசிக்: மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் இன்று (அக்.8) அதிகாலை நடந்த விபத்தில் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்தது. இதில் 11 பேர் பலியாகினர். 38 பேர் காயமடைந்தனர். இன்று அதிகாலை 5.15 மணியளவில் அவுரங்காபாத் சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது டிரக் மீது மோதி விபத்துக்குள்ளானது.
விபத்துக்குள்ளான பேருந்து ஸ்லீப்பர் கோச். அதிலிருந்த பயணிகள் பெரும்பாலானோர் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் தூக்கத்திலேயே தீயில் கருகி உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று நாசிக் துணை கமிஷனர் அமோல் தம்பே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி அளிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.