மம்முட்டியின் கருத்துக்கு எதிர்ப்புக்குரல் கொடுத்த கீர்த்தி சுரேஷின் தந்தை

கடந்த சில நாட்களுக்கு முன்பு மலையாள திரையுலகைச் சேர்ந்த இளம் நடிகர் ஸ்ரீநாத் பாஷி என்பவர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளிக்க சென்றபோது அதன் பெண் தொகுப்பாளரை அநாகரீகமான வார்த்தைகளில் பேசினார். இதுகுறித்து அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். அதேசமயம் தயாரிப்பாளர் சங்கம் அவர் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக அவர் புதிய படங்களில் நடிப்பதற்கு தற்காலிக தடை விதித்தது. இந்த சம்பவத்திற்கு முன்னதாக அவர்மீது ஏற்கனவே சில புகார்களும் தயாரிப்பாளர் சங்கத்திற்கு வந்ததுதான் இந்த நடவடிக்கைக்கு காரணம்.

இந்த நிலையில் சமீபத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியாகியுள்ள ரோர்ஸ்காட்ச் என்கிற படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோது நடிகர் ஸ்ரீநாத் பாஷி மீதான தடை குறித்து அவரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மம்முட்டி, யாராக இருந்தாலும் ஒருவரின் வாழ்வாதாரத்தை பறிக்கும் விதமாக தடை விதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்று பதிலளித்தார். சமீபத்தில் வெளியான பீஷ்ம பர்வம் படத்தில் மம்முட்டியுடன் ஸ்ரீநாத் பாஷி இணைந்து நடித்திருந்தார் என்பதால் சம்மந்தப்பட்ட நடிகருக்கு ஆதரவு கொடுக்கும் விதமாக மம்முட்டியின் கருத்து இருக்கிறது என மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பிரபல மலையாள தயாரிப்பாளரும் நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தையுமான சுரேஷ்குமார் மம்முட்டியின் கருத்துக்கு எதிர்ப்பு குரல் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி சுரேஷ்குமார் கூறும்போது, “தயாரிப்பாளர்கள் தங்களுக்கு தேவையில்லாமல் பிரச்சனைகளை கொடுக்கும் நபர்கள் மீது எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து முழு விபரம் என்னவென்று தெரிந்துகொண்டு மற்றவர்கள் பதில் அளிக்க வேண்டும்.. மம்முட்டி இதுகுறித்து விசாரித்துவிட்டு பின் பதில் சொல்கிறேன் என கூறி இருக்கலாம்.. மோகன்லாலும் மம்முட்டியும் கூட இதுபோன்ற தயாரிப்பாளர்களின் நடவடிக்கைகளை முடக்கும் விதமாக குரல் கொடுப்பதை கண்டு நாங்கள் பயப்பட போவதில்லை.. நடிகர்களுக்கு மட்டும் தான் வாழ்வாதாரமே இருக்கிறதா..? தயாரிப்பாளர்களுக்கு இல்லையா..? தயாரிப்பாளர்கள் தானே அந்த நடிகர்களின் வாழ்வாதாரத்திற்கே ஆதாரம்.. அவர்களைப் பற்றி யோசிக்க வேண்டாமா..? யார் ஒருவர் தயாரிப்பாளர்களுக்கு தொடர்ந்து பிரச்சினைகளை கொடுத்து வருகிறார்களோ அவர்கள்மீது தானே நடவடிக்கை எடுக்கப்படுகிறது..? அப்படிப்பட்ட ஒருவருக்காக எதையும் முழுதாக தெரிந்துகொள்ளாமல் ஆதரவு குரல் கொடுப்பது முறையல்ல என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.