சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஜெகன்நாத் என்பவர் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தானில் அசாதாரண சூழல் நிலவுகிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் எழுச்சி காரணமாக இந்தியாவின் பாதுகாப்பு, ஒருமைப்பாட்டுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இலங்கையுடன் கடல் எல்லையை பகிர்ந்துள்ள தமிழகம் மீது எதிரி நாடுகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சிறப்பாக இருந்தாலும், தீவிரவாத தாக்குதல்களை எதிர்கொள்ள சிறப்பான அமைப்பு தேவை.
எனவே, மற்ற மாநிலங்கள்போல தமிழகத்திலும் தீவிரவாத தடுப்பு பிரிவை உருவாக்க வேண்டும்.
தீவிரவாத தாக்குதலை எதிர்கொள்வதற்கான நடவடிக்கை குறித்து அறிக்கை தரவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இது நாளை விசாரணைக்கு வருகிறது.