கண்டி மாவட்டத்தில் 14 ஆயிரத்து 476 ஹெக்டேயர் வயல் நிலத்தில் விதைக்கப்பட்டுள்ள நெற்பயிர்களுக்கு எதிர்வரும் பருவத்திற்கான கரிம உரங்கள் வழங்கப்படவுள்ளதாக தேசிய உர செயலகத்தின் கண்டி மாவட்ட பிராந்திய அலுவலகம் தெரிவித்துள்ளது.
கரிம உரங்களை உற்பத்தி செய்யும் எட்டு கம்பனிகள் இம்மாவட்டத்திற்கு உரங்களை வழங்குவதாக அலுவலகத்தின் கண்டி மாவட்ட உதவிப் பணிப்பாளர் W.M.W.G. ஆனந்த தெரிவித்தார்.
மேலும், கரிம உரங்கள், கரிம திரவ உரங்கள் மற்றும் ஏனைய உரங்கள் தயாரிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், மாதிரிகள் விவசாய துறையினரின் அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கண்டி மாவட்டத்தின் மினிபே மற்றும் முரபொல கால்வாய் ஆகிய பாரிய நீர்ப்பாசன திட்டங்கள் உட்பட அனைத்து நெற்பயிர்களுக்கும் இந்த கரிம உரங்கள் கிடைக்கும் எனவும் உதவிப் பணிப்பாளர் குறிப்பிட்டார்.
இதேவேளை கரிம உர உற்பத்தியை மேற்கொள்ளும் பகுதிகளை அவதானித்து வருவதாகவும், எதிர்காலத்தில் பயிர் செய்கைகளுக்கு தேவையான மொத்த உர வகைகளும் விவசாய சேவை நிலையங்கள் மட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.