காணாமல் போனோரின் உறவினர்களுக்கு வழங்கப்படும் உதவுதொகை அதிகரிப்பு

காணாமல் போனோரின் குடும்பங்கள் அல்லது நெருங்கிய உறவினர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு இலட்சம் ரூபா உதவு தொகை இரண்டு இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்து.

நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச வினால் இதற்கான யோசனை முன்வைக்கப்பட்டு அது அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக ஊடக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான பந்துல குணவர்தன அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற அரசின் அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் (11)  தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:
காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு பதிவாளர் தலைமையதிபதியால் வழங்கப்படும் காணாமல் போனமைக்கான சான்றிதழை அடிப்படையாகக் கொண்டு காணாமல் போன ஆளொருவரின் நெருங்கிய உறவினருக்கு 100,000 ரூபா தொகையை செலுத்துவதற்காக 2022.03.14 அன்று இடம்பெற்ற அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனாலும் காணாமல் போனமைக்கான சான்றிதழை (Certificate of Absence)  பெற்றுக் கொள்வதற்கு நீண்டகாலம் எடுக்கின்றமை, செலுத்தப்படுகின்ற 100,000 ரூபா தொகை போதுமானதாக இன்மை போன்ற விடயங்களை கருத்தில் கொண்டு, குறித்த ஆளொருவர் காணாமல் போயுள்ளமையை இழப்பீட்டு அலுவலகத்தால் உறுதிப்படுத்தப்பட்டிருப்பின் காணாமல் போனமைக்கான சான்றிதழைப் (Certificate of Absence) பெற்றுக்கொள்ள வேண்டிய தேவையை நீக்குவதற்கும், செலுத்தப்படுகின்ற தொகையை 200,000 ரூபா வரைக்கும் அதிகரிப்பதற்கும் நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இச்செய்தியாளர் மாநாட்டை அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணத்ன நெறிப்படுத்தினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.