முதன் முறையாக ஹிமாலச்சப் பிரதேசத்தில் இந்தியாவில் 2009 ஆம் ஆண்டு நெகிழிப் பொருட்கள் பயன்பாடு தடை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், உத்தரபிரதேசம், மஹாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்களிலும் தடை விதிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து கோவா, குஜராத், கேரளா, ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு பகுதியளவு தடை விதிக்கப்பட்டன. கடந்த 2020 ஆம் ஆண்டு அண்டைய மாநிலமான கேரளா பிளாஸ்டிக் பொருட்களுக்கு முழுமையாக தடை விதித்தது.
குறைந்த பயன்பாடு மற்றும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு, விநியோகம், விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவை நாடு முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று கோயம்புத்தூர் மாநகராட்சி ராஜவீதி ,அண்ணா மார்க்கெட் ,தாமஸ் வீதி, 100 அடி சாலை மற்றும் கிராஸ்கட் சாலை ஆகிய, இடங்களில் அமைந்துள்ள பல்வேறு கடைகளில் இருந்து 516 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, கடை உரிமையாளர்களுக்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதாக கூறி மொத்தம் ரூ.51,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.