திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே வீரசோழபுரம் என்ற கிராமத்தில் கடல் பாசியில் இருந்து ரசாயன கலவை பொருட்கள் தயாரிக்கும் தனியார் கம்பெனி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கம்பெனியில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.
இதில், மதுரை மாவட்டத்தை சேர்ந்த ரவி என்ற தொழிலாளி வேலை செய்து வந்துள்ளார். இவருடன் மனைவி ஜோதி மற்றும் மகன் பாலமுருகன் ஆகியோருடன் கம்பெனியில் வளாக குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வந்துள்ளார். அதேபோல் அவருக்கு அருகில் சிவமுருகன் என்பவரும் இந்த கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார்.
இதில் நண்பர்களாக ரவியும், சிவமுருகனும் நேற்று முன் தினம் இரவு மது அருந்தியுள்ளனர். அப்போது அவர்கள் அருகில் கிடந்த பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்த ரசாயனத்தை தண்ணீர் என நினைத்து மதுவில் கலந்து குடித்துள்ளனர். சிறிது நேரத்தில் இருவருக்கும் நெஞ்செரிச்சல், வயிற்றெரிச்சல் ஏற்பட்டு மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் இருவரும் ஏற்கனவே இருந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வெள்ளகோவில் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.