புதுடெல்லி: முற்றிலும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் டெல்லி – வாரணாசி மற்றும் டெல்லி கட்ரா இடையே இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 30ம் தேதி குஜராத்தின் காந்தி நகரில் இருந்து மும்பை செல்லும் 3வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். சில தினங்களுக்கு முன் இந்த ரயில் அடுத்தடுத்த நாளில் எருமைகள், பசு மீது மோதி சேதமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லி – வாரணாசி வந்தே பாரத் ரயிலில், ஒரு சக்கரம் சுற்றாமல் நின்றதால் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இந்த பரபரப்பான சூழலில், டெல்லி – இமாச்சலப்பிரதேசம் இடையே 4வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை உனா மாவட்டத்தில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த ரயில் டெல்லி ரயில் நிலையத்தில் இருந்து உனா மாவட்டத்தின் ஆம் ஆன்டரா வரை இயக்கப்படும். புதன்கிழமை தவிர்த்து வாரத்தின் 6 நாட்களும் ரயில் இயக்கப்படும்.
