சமோசா பெரும்பாலான மக்களுக்கு மிகவும் பிடித்த உணவு. சமோசாவின் மேல் இருக்கும் மொறுமொறு லேயருக்கு தனி ரசிகர் பட்டாளம் இருந்தாலும், அவற்றின் உள்ளே வைக்கப்படும் ஸ்டஃபிங், சமோசாவிற்கு கூடுதல் சுவையைத் தரும்.

உருளைக்கிழங்கு சமோசா, ஆனியன் சமோசா, நூடுல்ஸ் சமோசா, சில்லி சீஸ் சமோசா, சாக்லேட் சமோசா, பன்னீர் சமோசா, முட்டை சமோசா என சமோசாவின் வகைகள் உணவின் பரிணாமத்துக்கு ஏற்ப உருவெடுத்துக் கொண்டே இருக்கின்றன.
ஒருவேளை இத்தனை வகை சமோசாக்களையும் ஒருசேரப் பொரித்து தட்டில் வைத்து விட்டால் எப்படி அடையாளம் காண்பது…. குழப்பமாகி விடும் அல்லவா?
அப்படி மக்கள் குழம்பி விடக்கூடாது என்பதற்காக சமோசாவின் மேல், அதன் உள்ளே என்ன ஸ்டஃபிங் வைக்கப்பட்டுள்ளது என்று அச்சடித்து அனுப்பி உள்ளது பெங்களூருவில் சமோசாவை விநியோகிக்கும் சமோசா பார்ட்டி (Samosa Party) நிறுவனம்.
அந்த சமோசாக்களை பார்த்ததும் ஆச்சர்யமடைந்த ஷோபித் பக்லிவா (Shobhit Bakliwa) என்ற நபர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பெங்களூருவில் உண்மையான டெக் கண்டுபிடிப்பு” என்று குறிப்பிட்டு அந்த சமோசாவின் புகைப்படங்களைப் பதிவிட்டு இருந்தார். அதில் டப்பாக்களில் இருக்கும் நான்கு சமோசாக்களின் க்ரிஸ்ப் பகுதிக்கு அடியில், உருளைக்கிழங்கு என்றும், இன்னொரு சமோசாவில் நூடுல்ஸ் என்றும் பொறிக்கப்பட்டுள்ளது.
the real food “tech” innovation in bangalore pic.twitter.com/tVfd9Yz0tq
— Shobhit Bakliwal (@shobhitic) October 10, 2022
இந்தப் பதிவு வைரலானதை தொடர்ந்து அந்த உணவு நிறுவனம் கமென்ட்டில், “நன்றி ஷோபித். நீங்கள் இதைக் கவனித்ததில் மகிழ்ச்சி. இது வாடிக்கையாளர்களின் பிரச்னையைத் தீர்க்கிறது. இதன் மூலம் சமோசாக்களை உடைக்காமலேயே, உள்ளே என்ன ஃபில்லிங் (filling) வைக்கப்பட்டுள்ளது என்பதை அடையாளம் காண முடியும்’’ என்று தெரிவித்துள்ளது.
இதேபோல ஒரு சம்பவம் ஹைதராபாத்தில் நிகழ்ந்தது. அதில் சமோசா ஆர்டர் செய்தவரின் பெயர் பொறிக்கப்பட்டு இருந்தது. மிகவும் எளிமையான இந்த முறை வாடிக்கையாளர்களை தன் வசம் ஈர்க்கும் விதமாக உள்ளது என்று அந்த நபர் பதிவிட்டு இருந்தார்.