மத்திய அரசில் ஆட்சி பொறுப்பில் இருக்கும் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் அதிமுக, தலையில்லாமல் தட்டுதடுமாறிக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதா இறந்த உடன் ஆரம்பித்த குழப்பம், எப்போது முடியும் என்ற திசையே தெரியாமல் தொடுவானத்தை நோக்கி பயணிப்பது போல் அக்கட்சியின் பிரச்சனை பயணித்துக் கொண்டிருக்கிறது. டெல்லியை சமாளித்து அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக வந்துவிடலாம் என்று எண்ணிய எடப்பாடி பழனிசாமிக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் மேலிடம் இதுவரை சிவப்பு கம்பளம் விரிக்கவில்லை. மாறாக ஓபிஎஸ் எடுக்கும் மூவ்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
எடப்பாடி அப்செட்
இதுவே ஓபிஎஸ்ஸூக்கு ஆதரவாக மேலிடம் இருப்பதாக அதிமுக வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. கொங்கு மண்டலத்தில் இருக்கும் பிரபல பாஜக தலைவர்கள் வழியாக மேலிடத்தை சரிக்கட்டும் முயற்சியும் பலனிக்காததால் படு அப்செட்டில் இருக்கிறதாம் எடப்பாடி அணி. இதனை வெளியில் காட்டிக் கொள்ளாவிட்டாலும், உள்ளுக்குள் புகைந்து கொண்டிருக்கிறார்களாம். அதிமுக சீனியர்களை பொறுத்தவரை, நம் கட்சிக்குள் இருக்கும் குழப்பத்தை பயன்படுத்தி பாஜக வளர பார்க்கிறது என்பதை நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள்.
எடப்பாடி vs பாஜக
அதிமுகவின் கோட்டை என கூறப்படும் கொங்கு மண்டலம் தான் பாஜகவின் டார்க்கெட்டும். அப்படி இருக்கும்போது, எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக வரவிட்டால், கொங்கு மண்டலத்தில் பாஜகவை எப்படி வளர்க்க முடியும்? என்பது பாஜக மேலிடத்தின் கணக்கு. இதனால், எடப்பாடிக்கு எதிராகவும் இல்லாமல், ஆதரவாகவும் இல்லாமல் நாங்கள் சொல்லும் வழியில் செல்லுங்கள் என்பதே இப்போதைக்கு மேலிடத்தில் வந்திருக்கும் செய்தியாம்.
ஓபிஎஸ்ஸூக்கு கிரீன் சிக்னல்
இதனை எடப்பாடி அணி ரசிக்கவில்லை என்பதை நன்கு புரிந்து கொண்ட பாஜக மேலிடமும், ஓபிஎஸ்ஸூக்கு கிரீன் சிக்னலை கொடுத்துவிட்டதாம். இதனால் அடுத்தடுத்த மூவ்களை ஆரம்பிக்க தயாராகிக் கொண்டிருக்கிறார் ஓபிஎஸ். அவர் எடுக்கும் நடவடிக்கையை பொறுத்து தான் இரட்டை இலையின் எதிர்காலமும் இருக்கிறது. ஒருவேளை அதிமுக இணைந்து செயல்பட எடப்பாடி அணி இசைந்து வராவிட்டால், நாடாளுமன்ற தேர்தல் நெருக்கத்தில் சின்னத்தை முடக்கவும் தயாராகவே இருக்கிறதாம் எதிர் தரப்பு. இதையே பாஜகவும் எதிர்பார்ப்பதால், டெல்லி வரும்போது எங்கள் ஆட்டத்தை பாருங்கள் என காத்துக் கொண்டிருக்கிறார்களாம். அதேநேரத்தில் கொங்கு பகுதியில் வாரவாரம் ஒரு கூட்டம், நிர்வாகிகள் சந்திப்பு என்பது படு ஜோராக கள பணிகளை செய்து கொண்டிருக்கிறது பாஜக.