சுமைதூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: திருச்சி காந்தி மார்க்கெட்டில் காய்கறிகளுக்கு தட்டுப்பாடு; ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனை

திருச்சி: திருச்சி காந்தி மார்க்கெட்டில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் காய்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ரூ.30-க்கு விற்கப்பட்ட ஒருகிலோ தக்காளி ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது.

திருச்சியில் காந்தி மார்க்கெட் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் இந்த மார்க்கெட்டுக்கு மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மார்க்கெட்டில் திருச்சி மட்டுமின்றி அருகில் உள்ள பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர், தஞ்சாவூர், உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பொதுமக்களும் வியாபாரிகளும் தங்களுக்கு தேவையான காய்கறிகளை மொத்தமாகவும், சில்லறையாகவும் வாங்கிச்செல்கின்றனர்.

இந்நிலையில், இந்த பகுதியில் தக்காளிக்கென தனி வியாபாரிகளும், சுமை தூக்கும் தொழிலாளர்களும்  உள்ளனர். சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு ஒரு லோடுக்கு ரூ.9.25 கூலியாக வழங்கப்படுகிறது. அதனை உயர்த்தி ரூ.11-ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக நேற்று வியாபாரிகளுக்கும், சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையில் வியாபாரிகள் கூலி உயர்வுக்கு சம்மதம் தெரிவித்தனர். மேலும் இந்த கூலி உயர்வு ஒப்பந்தத்தை 3 ஆண்டுகளுக்கு போட வலியுறுத்தினார். ஆனால் அதனை தொழிலாளர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. கரணம் கடந்த ஆண்டுகளில் 2 ஆண்டுகளுக்கு மட்டுமே இது போன்ற ஒப்பந்தங்கள் போடப்படுவது வழக்கம். 3ஆண்டுகள் என்பதை ஒப்பு கொள்ள முடியாது என தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இரண்டரை ஆண்டுகள் ஒப்பந்தத்திற்கு தொழிலாளர்கள் ஒப்புக்கொண்ட நிலையில், வியாபாரிகள் 3 ஆண்டுகள் ஒப்பந்தத்தில் உறுதியாக இருந்தனர். இதனால் அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. தெடர்ந்து சுமை தூக்கும் தொழிலார்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக வெளியூரில் இருந்து வரக்கூடிய தக்காளிகளை இறக்குமதி செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் நேற்று ஒரு கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளிகள் இன்றைய தினம் ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. 25 கிலோ எடைகொண்ட ஒருபெட்டி தக்காளியானது நேற்றைய தினம் ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று அது ரூ.1,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.