பெங்களூரு : அரசு பள்ளியில் படிக்கும் சிறார்களுக்கு, ஊட்டச்சத்து கிடைக்கும் நோக்கில், மதிய உணவு திட்டத்தை, கர்நாடக அரசு செயல்படுத்தியது. ஆனால் அதிகாரிகள், ஆசிரியர்களின் அலட்சியத்தால், இத்திட்டம் சிறார்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. திட்டம் முழுமையான வெற்றி அடையவில்லை.
அரசு பள்ளிகளுக்கு, மாணவர்களை ஈர்க்கவும், அவர்களுக்கு ஊட்டச்சத்தான உணவு கிடைக்கவும், கர்நாடக அரசு, 2002 – 03ம் ஆண்டில் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை செயல்படுத்தியது.
இதற்காக நுாற்றுக்கணக்கான கோடி ரூபாய் செலவிட்டது. திட்டத்தின் கீழ் தினமும் மதியம், பள்ளிகளில் இலவச உணவு வழங்கப்பட்டது. ஊட்டச்சத்தான காய்கறிகள், கீரைகள் உணவில் சேர்க்கப்பட்டன.
ஆரம்பத்தில் திட்டம் சிறப்பாக செயல்பட்டது. லட்சக்கணக்கான சிறார்கள் பயனடைந்தனர். நாளடைவில், அதிகாரிகள், ஆசிரியர்களின் பொறுப்பற்ற தன்மையால், திட்டமே சிறார்களின் ஆரோக்கியத்துக்கு அபாயத்தை ஏற்படுத்துகிறது.
ஏனென்றால், பள்ளிகளில் மதிய உணவுக்கு தரமற்ற உணவு தானியங்கள், அழுகிய காய்கறிகள் பயன்படுத்துவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அரிசியில் புழுக்கள்
சமீப ஆண்டுகளாக, புழுத்து போன அரிசி, பருப்பை பயன்படுத்தி உணவு தயாரிக்கின்றனர். முந்தைய வாரம் மாண்டியாவின், பசராளு அரசு பள்ளியில், பருப்பில் புழுக்கள் இருந்தது, ஊடகங்களின் ஆய்வில் தெரிந்தது.
அரிசியில் வெள்ளை நிற புழுக்களும், பருப்பில் கறுப்பு நிற புழுக்களும் காணப்பட்டன. இதையே சமைத்து மாணவர்களுக்கு பரிமாறினர். இதை சாப்பிட்டதால் அவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டது.
மாண்டியா மட்டுமின்றி, ராய்ச்சூர், கொப்பால், விஜயபுரா, ஹாவேரி, சிக்கபல்லாபூர், தாவணகரே, பெலகாவி உட்பட பல்வேறு மாவட்டங்களிலும், இதே சூழ்நிலைதான் நிலவுகிறது.
உணவு சமைப்பதிலும், துாய்மையை கடைப்பிடிப்பதில்லை. மத்துாரின், பள்ளியொன்றில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்டதில், 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் வாந்தி, வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
முந்தைய வாரம், ஷிக்காவியின், அரசு பள்ளியில் வினியோகிக்கப்பட்ட பாலை அருந்திய மாணவர்கள் பாதிப்படைந்தனர்.
கொப்பாலின், மாதினுரா பள்ளியில், தரமற்ற பருப்பால் சாம்பார் செய்திருந்தனர். இதை சாப்பிட முடியாமல், மாணவர்கள் சாக்கடையில் கொட்டினர். சிவபுரா கிராமத்திலும் கூட, இதேபோன்ற சம்பவம் நடந்தது.
உணவுத்துறை வினியோகிக்கும் உணவு தானியங்களை, ஆசிரியர்கள் மறு பேச்சு பேசாமல் பெற்றுக் கொள்கின்றனர். தரமற்றதாக இருந்தாலும், கேள்வி எழுப்புவதில்லை.
ஒருவேளை இத்தகைய அரிசி, பருப்பு பயன்படுத்தி சமைக்கப்பட்ட உணவை சாப்பிட்டு, மாணவர்கள் பாதிக்கப்பட்டால், ஒருவர் மீது மற்றொருவர் குற்றம்சாட்டி நழுவுகின்றனர்.
விதிமுறை புறக்கணிப்பு
வினியோகிக்கப்பட்ட உணவு தானியங்கள், தரமற்றதாக இருந்தால், அதை திருப்பியனுப்ப வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் இந்த விதிமுறையை, பெரும்பாலான ஆசிரியர்கள் பின்பற்றுவதில்லை.
உணவு தானியங்களை திருப்பியனுப்பினால், மீண்டும் உணவு தானியங்கள் கிடைப்பது தாமதமாகும்.
அவசரமாக வேண்டுமானால், ஆசிரியர்களே உணவுப் பொருட்கள் கார்ப்பரேஷன் கிட்டங்கிகளுக்கு சென்று, பெற்று வர வேண்டும்.
இதே காரணத்தால், எப்படிப்பட்ட உணவு தானியங்களை வினியோகித்தாலும், ஆசிரியர்கள் தரத்தை பரிசோதிக்காமல், தானியங்களை பெற்று சேகரித்து வைக்கின்றனர்.
சிறார்களுக்கு ஊட்டச்சத்தான உணவு கிடைக்க வேண்டும் என்ற நல்ல நோக்கில், பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை, மாநில அரசு செயல்படுத்தியது.
ஆனால் அதிகாரிகள், ஆசிரியர்களின் அலட்சியம், பொறுப்பற்ற தன்மையால், இந்த திட்டமே சிறார்களின் ஆரோக்கியத்துக்கு அபாயத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு பயந்து பெற்றோர், தங்கள் பிள்ளைகளுக்கு வீட்டிலிருந்தே, உணவு கொடுத்தனுப்புகின்றனர்.
சில ஆசிரியர்கள், மதிய உணவு திட்டத்தின் பெயரில், பாடம் நடத்துவதை விட்டு, நாள் முழுதும் வெட்டியாக பொழுது போக்குவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தொண்டு அமைப்புகள்
பெங்களூரு, மங்களூரு, பெலகாவி, கொப்பால், ராய்ச்சூர், விஜயநகர், பல்லாரி மாவட்டங்களின் சில பள்ளிகளில் மதிய உணவு வழங்கும் பொறுப்பை, தொண்டு அமைப்புகள் ஏற்றுள்ளன.
இதனால் உணவில் எந்த பிரச்னையும் ஏற்படுவதில்லை. இதே நடைமுறையை, மற்ற மாவட்டங்களிலும் செயல்படுத்தும்படி, பெற்றோர் வலியுறுத்துகின்றனர்.
மாதம் ஒரு முறை
உணவுத் துறையின் ஒரு அதிகாரி கூறியதாவது:
மூன்று மாதங்களுக்கு தேவையான அரிசி, பருப்பு பள்ளிகளுக்கு அனுப்பப்படுகின்றன.
கிட்டங்கியில் கெமிக்கல் பயன்படுத்துவதால், எத்தனை நாட்களானாலும் உணவு தானியங்கள் பாழாவதில்லை.
ஆனால் பள்ளிகளில் அந்த வசதி இல்லை. இதுவே பிரச்னைகளுக்கு காரணமாகிறது. மாதத்துக்கு ஒரு முறை உணவு தானியங்கள் வழங்க ஆலோசிக்கப்படுகிறது.
மேலும், ஒன்று முதல், 5ம் வகுப்பு வரையிலான சிறார்களுக்கு, 100 கிராம் அரிசி; 6ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரையிலான சிறார்களுக்கு, 150 கிராம் அரிசி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அளவு அரிசியால் தயாரித்த சோற்றை, சிறார்கள் சாப்பிடுவதில்லை.
மிச்சமாகும் அரிசியை பள்ளியிலேயே சேகரித்து வைக்க வேண்டும். இதில் புழுக்கள் சேர்ந்து விடுகிறது. பருப்பு வினியோகிக்கும் பொறுப்பை, தனியாருக்கு அரசு டெண்டர் அளித்துள்ளது.
அரசு நிர்ணயித்த தொகையில், சிறந்த தரமான பருப்பு கொடுக்க முடியாது. டெண்டர் பெற்றவர்கள், விலைக்கு தக்கபடி பருப்பு வினியோகிக்கின்றனர்.
இதுவும் கூட சில நாட்களிலேயே கெட்டு விடுகிறது.
பள்ளிகளுக்கு வினியோகிக்கப்படும், அரிசி, பருப்பு மாதிரியை மாலை வரை வைத்திருந்து, தரத்தை பரிசீலிக்க வேண்டும் என்பது விதிமுறை. இதை ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்