ஆங்கில மொழி பயிற்றுவிக்கும் பயிற்சியை முடித்த ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கினார் மேயர் பிரியா!
சென்னை பெருநகர் வளர்ச்சி திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்களுக்கு ஆங்கில மொழி கற்பிக்கும் வகையில் ஆசிரியர்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டது. அந்த பயிற்சியில் கலந்து கொண்டு தேர்ச்சி அடைந்த அனைவருக்கும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சென்னை மாநகராட்சியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சென்னை மேயர் பிரியா, துணை மேயர், சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பிரியா கூறியதாவது “பள்ளி மாணவர்களின் ஆங்கிலத்திறன் மேம்பாட்டிற்காக இந்த பயிற்சி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியை சென்னை மாநகராட்சியில் உள்ள பள்ளிகளுக்கு மிக முக்கியமான அறிவிப்பு மற்றும் திட்டம் என்பதை ஒரு மாநகராட்சியின் மேயராக வரவேற்கிறேன்.
இந்த பயிற்சியில் பங்கேற்ற அனைத்து ஆசிரியர்களும் தாங்கள் பயின்றதை சக ஆசிரியர்களுக்கும் தெரிவித்து அனைவரும் பயன்பெறும் வகையில் அனைத்து மாணவர்களுக்கும் சென்றடைய அனைத்து ஆசிரியர்களுக்கும் இந்த பயிற்சியை பற்றி பகிர்ந்து கொள்ள வேண்டும். சென்னை மாநகராட்சியில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சியை தவிர ஆங்கிலம் படிக்கும் திறமையையும் வளர்க்க வேண்டும். அதற்காக தினமும் காலை வகுப்பு நேரங்களில் ஐந்து நிமிடம் ஆங்கிலத்தை படிக்க வைக்க வேண்டும். இதன் காரணமாக மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படும். இந்த காலகட்டத்தில் ஆங்கிலம் மிக முக்கியமானது என்பதால் தினமும் காலையில் ஆங்கிலம் படிக்க வைத்து திறனை மேம்படுத்த வேண்டும்.
இதை அனைத்து ஆசிரியர்களும் பின்பற்றுமாறு வலியுறுத்துகிறேன். மேலும் பயிற்சி முடித்து சான்றிதழ் பெற உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த பயிற்சியை ஒருங்கிணைத்து வழங்கிய அனைவருக்கும் சென்னை பெருநகர் மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என மேயர் பிரியா ஆங்கிலத்தில் துண்டு சீட்டு பார்க்காமல் பேசினார்.
இதனால் நிகழ்ச்சியில் இருந்த அனைவரும் பிரியாவை கைத்தட்டி மனதார பாராட்டினர். பேட்டியை முடித்த பின்பு சென்னை மாநகராட்சி ஆணையரிடம் பேப்பரை காட்டி இதை பார்த்து தானே படிக்க சொன்னீர்கள் என அவர் பேசியது செய்தியாளர்கள் வைத்திருந்த மைக்கில் தெளிவாக பதிவாகியுள்ளது. சென்னை மேயர் பிரியாவை அமைச்சர்கள் ஒரு சிலர் சரியான முறையில் நடத்தவில்லை என எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தனர். மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் எந்த அமைச்சர்களும் பங்கு பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.