ஆன்லைன் சூதாட்டம்:
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களில் சிக்கி பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. ஆன்லைன் சூதாட்டத்தின்மீதான மோகம் காரணமாகப் பணத்தை இழக்கும் இளைஞர்கள், மன விரக்தியில் விபரீத முடிவெடுக்கின்றனர். தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள்களாக முன்வைக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஜூன் 6-ம் தேதி தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவின் தலைமையில் ஐ.ஐ.டி தொழில்நுட்ப வல்லுநர் டாக்டர் சங்கரராமன், ஸ்நேஹா அமைப்பின் நிறுவனர், உளவியல் மருத்துவர் லட்சுமி விஜயகுமார், காவல்துறை கூடுதல் இயக்குநர் வினித் தேவ் வான்கடே மற்றும் ஐ.பி.எஸ் அலுவலர்கள் அடங்கிய ஒரு குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த குழு அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தனது பரிந்துரைகளை அரசுக்கு வழங்கும் எனவும் கூறப்பட்டது. குழு வழங்கும் பரிந்துரைகளின் அடிப்படையில், அவசரச் சட்டம் கொண்டுவரப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, ஆன்லைன் விளையாட்டுக்குத் தடைச் சட்ட மசோதாவை உருவாக்குவதற்கான காரணங்கள் என்னென்ன என்பது குறித்தும் இந்தக் குழு ஆய்வு நடத்தி, 27.6.2022 அன்று தனது அறிக்கையை சமர்ப்பித்திருந்தது.
அவசர தடை சட்டம்:
ஆன்லைன் சூதாட்டத்துக்குத் தடை விதிப்பது தொடர்பாகப் பொதுமக்கள் 10,735 பேரிடம் கருத்துக் கேட்கப்பட்டது. இதில், 99 சதவிகிதம் பேர் தடை சட்டம் கொண்டுவரவேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தனர். மேலும், ஆன்லைன் கேம் விளையாடும் மாணவர்கள் குறித்து இரண்டு லட்சம் அரசுப் பள்ளி ஆசியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பில், 70 சதவிகித பேர் மாணவர்களுக்குக் கவன சிதறல் ஏற்படுவதாகவும், 67 சதவிகித பேர் மாணவர்களின் கண் பார்வை பாதிக்கப்படுவதாகவும், 74 சதவிகித பேர் மாணவர்களின் அறிவு, சிந்தனை, எழுத்துத் திறன் குறைந்திருப்பதாகவும், 76 சதவிகிதம் பேர் மாணவர்களுக்குத் தாழ்வு மனப்பான்மை அதிகரித்திருப்பதாகவும், 75 சதவிகிதம் பேர் மாணவர்கள் ஒழுக்கக்கேடாக நடந்துகொள்வதாகவும் கருத்து தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தமிழ்நாடு அரசு, ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குபடுத்துதல் அவசரச் சட்ட மசோதா-2022 உருவாக்கியது. இந்த மசோதாவுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதலும் வழங்கப்பட்டிருந்தது. இந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டிருந்தது. இதனையடுத்து, இந்த அவசர சட்டத்துக்குத் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். மேலும், அக்டோபர் 17-ம் தேதி தொடங்கவுள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சட்டமாக இயற்றப்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. அவசரச் சட்டம் குறித்து அரசிதழும் வெளியாகியுள்ளது.
அரசிதழில் வெளியீடு:
அரசிதழில், “ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் இயற்றப்பட்ட பின்னர் தமிழ்நாட்டில் எந்த நபரும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடமுடியாதவாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களுக்குத் தடை. எந்த ஊடகங்களிலும், செயலிகளிலும், நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது. ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு வங்கி பணப்பரிமாற்றம் செய்ய வங்கிகள் ஒத்துழைக்கத் தடை. சூதாட்டம் அல்லாத இதர ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க முடிவு. ஆணையத்தின் உறுப்பினர்களாக ஐ.டி வல்லுநர், உளவியல் நிபுணர், ஆன்லைன் விளையாட்டு வல்லுநர் ஆகியோர் இடம் பெறுவார்கள். இந்த ஆணையம், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்குவது, கண்காணிப்பது, தரவுகளைச் சேகரிப்பது, குறைகளுக்குத் தீர்வு காண்பது, விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்வது போன்ற பணிகளை மேற்கொள்ளும்.

ஆன்லைனில் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு மூன்று மாத சிறை தண்டனை அல்லது ஐந்து ஆயிரம் ரூபாய் அபராதம், அல்லது இரண்டும் சேர்ந்து தண்டனையாக விதிக்கப்படும். விளம்பரங்கள் வெளியிடுவோருக்கு ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் அல்லது ஒரு ஆண்டு சிறைத் தண்டனை அல்லது இரண்டும் சேர்ந்து தண்டனையாக விதிக்கப்படும். சூதாட்டத்தை நடத்தும் நிறுவனம் அல்லது நபர்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் அல்லது 3 ஆண்டு சிறை அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும். இரண்டாவது முறையாகத் தவறு செய்யும் நபர்களுக்கு, நிறுவனங்களுக்கு முன்பு வழங்கப்படத் தண்டனை இரட்டிப்பாக வழங்கப்படும். ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குமுறை ஆணையத்தால் விதிக்கப்படும் தண்டனைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது” என்று கூறப்பட்டுள்ளது.
தடை சட்டம்:
கடந்த 2020-ம் ஆண்டு அன்றைய அதிமுக ஆட்சியில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு அவசர தடை சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து பல்வேறு ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கானது தலைமை நீதிபதிகள் சஞ்சீவ் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வுக்கு முன்பாக விசாரணைக்கு வந்தது. வழக்கின் இரண்டு தரப்பு வாதங்களையும் நீதிபதிகள் கேட்டறிந்தனர்.

அப்போது பேசிய நீதிபதிகள், “ இந்த சட்டம் நிறைவேற்றும்போது, ஆன்லைன் விளையாட்டைத் தடை செய்ததற்கான போதுமான காரணங்கள் கூறப்படவில்லை. தமிழக அரசு சட்டம் கொண்டுவந்தது, சட்டத்துக்கு விரோதமானது. சரியான விதிகள் இல்லாது ஆன்லைன் விளையாட்டுகளைத் தடை விதிக்க முடியாது. மேலும், ஆன்லைன் விளையாட்டுகளுக்கான விதிமுறைகளை உருவாக்கி புதிய சட்டம் கொண்டுவர எந்த தடையும் கிடையாது” என்று கூறி தமிழக அரசு கொண்டுவந்த சட்டத்தை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குபடுத்துதல் அவசரச் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார். எதிர்க்கட்சிகளும் இந்த சட்டத்துக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காது ஆதரவு தருவார்கள். வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் சட்டம் நிறைவேற்றப்பட்டு விரைவில் நடைமுறைக்கு வந்துவிடும்.

இதுகுறித்து சட்ட வல்லுநர்கள் சிலரிடம் பேசினோம், “முன்பு கொண்டுவரப்பட்ட சட்டத்தை விட, இந்த சட்டம் வலுவாக இருக்கிறது. ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்வதற்கான காரணங்கள் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதற்காகத் தனி ஆணையம் கொண்டுவரப்படுகிறது. ஆணையத்தின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறப்பட்டுள்ளது. எனவே இந்தமுறை இந்த சட்டத்துக்கு நீதிமன்றம் தடை விதிக்க முடியாது” என்று கருத்து தெரிவித்துள்ளனர்.