வளிமண்டல குறைந்த தாழ்வு அழுத்தம் காரணமாக, புதுக்கோட்டை மாவட்டம் முழுவதுமே, கடந்த சில தினங்களாகவே பரவலாக மழை பெய்து வந்தது. கனமழையால் மாணவர்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, கடந்த 10-ம் தேதி ஒருநாள் விடுமுறை அளித்தார்.
முன்னதாக, முதல்நாள் மாவட்ட ஆட்சியரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மெசேஜ் அனுப்பிய குறும்புக்கார மாணவர்கள் பலரும், பள்ளிக்கு லீவு விடச்சொல்லி கலெக்டரை நச்சரித்துவிட்டனர். தனக்கு வந்த இந்த இன்ஸ்டா மேசேஜ்களை ஸ்கிரீன் ஷாட் எடுத்த மாவட்ட ஆட்சியர், தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ‘Hahah! Some message requests on insta!’ என்ற கேப்ஷனுடன் பகிர்ந்துள்ளார்.
அந்தப் பதிவுகளில், ’மழை பெய்துக்கிட்டே இருக்கு. ஸ்கூலுக்கு நாளைக்கு லீவு விடுங்க மேம், நீங்க எடுக்கிற முடிவுல தான் பல பேரோட சந்தோஷம் இருக்கு ப்ளீஸ் மேம்’ என்று பதிவிட்டிருக்கிறார் ஒரு மாணவர்.

அதைவிட ஒருபடி மேல் போன மாணவர் ஒருவர், “படிச்சி படிச்சி பைத்தியம் புடிக்கிற மாதிரி இருக்கு மேம். நாளைக்கு மட்டும் லீவு இல்லையின்னா பைத்தியமே ஆயிடுவேன் போல. லீவு மட்டும் விடுங்க… உங்களுக்குக் கோயில் கட்டுறேன்… என் மனசுல! லீவு விடுங்க என் தெய்வமே’’ என்று மெசேஜ் அனுப்பியுள்ளார்.
பள்ளி மாணவர்கள்தான் இப்படி என்றால், கல்லூரி மாணவர் ஒருவரும், `செம மழை பெய்கிறது. தனியார் இன்ஜினீயரிங் கல்லூரியில் படிக்கிறேன். ஹாஸ்டல் போக முடியலை. அதனால, லீவு விடுங்க மேம்’ என்று கேட்கிறார். இப்படி கடந்த 9-ம் தேதி முழுவதும் மாணவர்கள், மாவட்ட ஆட்சியரின் இன்ஸ்டா பக்கத்தை நிறைத்திருக்கின்றனர்.
இதை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஸ்கிரீன் ஷாட் எடுத்து ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்டார். கலெக்டரின் இந்த பதிவையும், மாணவர்களின் வேண்டுகோள் மெசேஜ்களையும் பலரும் ரசித்து கமென்ட்களை பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக 80’ஸ் மற்றும் 90’ஸ் கிட்ஸ் பலரும் தங்களின் ஆதங்கங்களை ஜாலி கமென்ட்களாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஒருவர், “நாங்க படிக்கும்போதெல்லாம் இப்படி ஒரு கலெக்டர் மேம் இல்லையேன்னு வருத்தமா இருக்கு… லீவ் லெட்டர் எல்லாத்துக்கும் ஒரே வரிதான் – பாட்டி செத்து போச்சுன்னு பாட்டியை பலமுறை கொன்னவய்ங்க நாங்க..’’ என்று காமெடியாக குறிப்பிட்டுள்ளார்.
“நான் படிச்ச காலத்துல இன்ஸ்டாகிராம் இல்லாம போச்சே…’’ என்று இன்னொருவர் ஆதங்கப்பட்டுள்ளார்.
மற்றொரு நெட்டிசன், “கோவில் கட்டுறதா வேற சொல்றாங்களே… அதிலும் ரொம்ப ஜாக்கிரதையாக மனசுக்குள்ளேன்னு ஒரு வார்த்தை வேற..’’ என்று கலாய்த்திருக்கிறார்.
“லீவு கேட்ட எல்லாரையும் புடிச்சு ஜெயில்ல போடுங்க கலெக்டர் அம்மா’’ என்று ஒரு பதிவர் ஜாலி கோரிக்கை வைத்திருக்கிறார்.

மேலும், கலெக்டர் கவிதா ராமுவின் ஃபாலோயர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது என்றும், 2கே கிட்ஸ் கில்லாடிகளாக இருக்கிறார்கள் எனவும், பரீட்சைக்கு படிக்காத பயல் எவனோ அனுப்பிருக்கான் என்றும் நெட்டிசன்கள் பலரும் நகைச்சுவையுடன் கமென்ட் செய்து வருகின்றனர். குறிப்பாக, கலெக்டருக்கு ’செல்லம்’ என்று ஸ்மைலியுடன் அனுப்பிய மாணவரின் மெசேஜ் பலரையும் சிரிக்கவைக்க, அது குறித்த நகைச்சுவை கமென்ட்கள் நிறைய பகிரப்பட்டுள்ளன.
கலெக்டர் கவிதா ராமுவுக்கு மாணவர்கள் விடுத்த மெசேஜ் கோரிக்கைகளும், அதை பகிர்ந்த கலெக்டரின் பதிவுக்கான கமென்ட்களும் பலராலும் ரசிக்கப்பட்டு வருகிறது.