அண்மையில் காலிமுகத்திடலில் இடம்பெற்ற போராட்டத்தின் போது பொலிஸாரின் நடவடிக்கையினால் குழந்தையொன்று பாதிப்புக்கு உள்ளானமை குறித்தும், சிறுவர்களை போராட்டத்தில் ஈடுபடுத்துவதற்கு எதிராகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு பல தரப்பினரிடமிருந்தும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் போன்ற நிகழ்வுகளில் சிறுவர்களை பங்கேற்க வைப்பதன் மூலம் அவர்கள் பாதிக்கப்படலாம் என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த இரண்டு விடயங்கள் தொடர்பிலும் தமது அதிகார சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அதிகாரசபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவத்தின் பின்னர் சுகயீனமுற்றுள்ளதாக கூறி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தை வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளது. குழந்தையின் நிலை குறித்து வைத்தியசாலையின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் ஜி. விஜேசூரிய கருத்து தெரிவிக்கையில்…போராட்டங்கள் போன்ற சந்தர்ப்பங்களில் குழந்தைகளை அழைத்து வருவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.