மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழா – அடுத்த வருடம் மே மாதம் 6 ஆம் திகதி

இங்கிலாந்து மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழா 2023 ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறும் என்று பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது

இங்கிலாந்து மகாராணி 2ஆம் எலிசபெத் கடந்த மாதம் 8 ஆம் திகதி காலமானார். அதை தொடர்ந்து அவரது மகன் சார்லஸ் இங்கிலாந்தின் புதிய மன்னராக அறிவிக்கப்பட்டார்.

கடந்த மாதம் மன்னர் சார்லஸ் அரியணையில் அமரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, மன்னரின் முடிசூட்டு விழா, அடுத்த ஆண்டு (2023) மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறும் என்று பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக ட்விட்டர் பதிவில் அறிவித்துள்ளது. விழாவில் மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் அவரது மனைவி ராணியுமான கமீலா ஆகிய இருவருக்கும் முடிசூட்டப்படும்.

பாரம்பரிய மரபுப்படி, கையில் செங்கோல் ஏந்தி மன்னர் மூன்றாம் சார்லஸ் அரியணையில் அமர்வார். பிறகு, மூத்த மதகுருமார்களால் ஆசீர்வதிக்கப்பட்ட பிறகு மன்னருக்கு புனித எட்வர்ட் கிரீடம் சூட்டப்படும். பின்னர் பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து நாட்டு மக்களுக்கு மன்னர் உரையாற்றுவார்.

இதன் பிறகு அரசராக அவரது ஆட்சி அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்படும். 74 வயதாகும் 3 ஆம் சார்லஸ் மன்னர் இங்கிலாந்து வரலாற்றில் முடிசூட்டிக் கொள்ளும் மிக வயதான மன்னர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.