ஹரியானா மாநிலம் குருகிராம் மாவட்டத்தில், என்.ஜி.ஓ ஒன்றில் பணிபுரியும் பெண் ஒருவரை நிதி வழங்குவதாக வீட்டுக்கு அழைத்து அடித்து, பாலியல் வன்முறை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் இதுகுறித்து காவல்துறையில் புகார் செய்துள்ளார். அதில், “ஒருவர் என்ஜிஓ -க்காக நிதி அளிக்கிறேன். என் அலுவலகம் வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று அலைபேசியில் தொடர்பு கொண்டார். நான் அவரின் அலுவலகத்தைத் தொடர்பு கொண்ட போது, வீட்டில் வந்து பெற்றுக் கொள்ள சொன்னார். ரோஷன்பூர் காலனிக்கு அருகில் உள்ள சதர் பஜாரில் இருக்கும் அவரின் வீட்டின் முகவரி தந்தார்.
நான் வீட்டிற்குள் சென்றதும் வீட்டுக் கதவை மூடினார். பின்னர் என்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றார். இதுகுறித்து நான் எதிர் கேள்வி கேட்டதும், என்னை அடித்துத் துன்புறுத்தியதோடு என் ஆடைகளையும் கிழித்தார். பின்னர், பாலியல் வன்முறையில் ஈடுபட்டார்”, என அந்த பெண் புகார் அளித்துள்ளார்.

காவல்துறையில் புகார் அளித்ததைத் தொடர்ந்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலியல் வன்கொடுமை செய்த நபரின் பெயர் ராஜ்குமார். அந்த பெண்ணை காயப்படுத்தியது (IPC-323) மற்றும் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது (IPC- 354பி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து காவல்துறை துணை உதவி ஆய்வாளர் சுனிதா, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் குற்றம்சாட்டப்பட்ட ராஜ் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். அதோடு விசாரணை நடந்து வருவதாகக் கூறியுள்ளார்.