திருவனந்தபுரம்: செல்வம் கொழிக்கும் என்ற மூடநம்பிக்கையின் உச்சமாக கேரளாவில் இரு பெண்களை நரபலி கொடுத்த விவகாரத்தில் தம்பதிகள் உட்பட மூவரைக் கேரள போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள் கேரள மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தின் இலந்தூரில் பாரம்பரிய மருத்துவராக இருப்பவர் பகவல் சிங். இவரது மனைவி லைலா. இவர்களிடம் முகநூல் வழியாக எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஷிகாப் என்ற முகம்மது ஷபி அறிமுகமானார். தனக்கு மந்திரங்கள் தெரியும் எனச் சொன்னவர், வாழ்வில் சகல ஐஸ்வர்யங்களும், செல்வங்களும் பெருக நரபலி கொடுத்தால் ஏற்றம் பெறலாம் எனவும் ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய பகவல் சிங், லைலா தம்பதியினர் ஷபியின் வலையில் விழுந்தனர். நரபலி கொடுக்க தானே பெண்களை அழைத்து வருவதாகவும் ஷபி கூறியுள்ளார்.
இந்நிலையில் கேரளத்தின் கடவந்தறா பகுதியில் சாலையோரத்தில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த ரோஸ்லின் (59), எர்ணாகுளத்தில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த தமிழகத்தின் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பத்மா ஆகிய பெண்கள் அடுத்தடுத்து காணாமல்போனார்கள். இது குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டது. இருபெண்கள் மாயமானதும் ஒரேபாணியில் இருந்ததால், இதன் பின்னால் சதி இருக்கும் என கேரள போலீஸார் சந்தேகித்தனர்.
சைபர் க்ரைம் போலீஸார் உதவியுடன் பத்மாவின் செல்போன் சிக்னலை ஆராய்ந்தபோது, அது கடைசியாக திருவல்லா பகுதியில் பதிவாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்தனர். அதில் ஷபியுடன் பத்மா செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. இதன்அடிப்படையில் கைது செய்யப்பட்ட ஷபியை விசாரித்தபோது பல அதிர்ச்சி தகவல்கள் கசிந்தன.
துடிக்க துடிக்க நரபலி
போலீஸார் விசாரணையில் ஷபி கூறியதாவது:
இலந்தூரில் உள்ள பாரம்பரிய மருத்துவர் பகவல்சிங் வீட்டுக்கு ரோஸ்லின், பத்மாவை அழைத்துச் சென்று நரபலி கொடுத்தோம். இதற்காக பகவல் சிங் தம்பதிகளிடம் இருந்து பணம் பெற்றேன். முதலில் ரோஸ்லினை நரபலி கொடுத்தோம். ஆனால் எங்கள் வேண்டுதல் நிறைவேறவில்லை. இதனைத் தொடர்ந்தே பத்மாவையும் நரபலி கொடுத்தோம். கழுத்தை அறுத்து நரபலி கொடுத்து, அவர்கள் உடலை துண்டு, துண்டாக வெட்டி வீட்டிலேயே புதைத்தோம். ரோஸ்லின், பத்மா இருவரையும் வேலை வாங்கித்தருவதாகச் சொல்லி அழைத்து சென்றேன். நான் ஆரம்பத்தில் கார் டிரைவராக இருந்ததால் எனது காரிலேயே அழைத்து வந்தேன்” என்றார்.
நரபலி கொடுக்கப்பட்ட பகவல்சிங் வீட்டின் பக்கத்து வீட்டுக்காரரான ஜோஸ் தாமஸ் என்பவர்தன் வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீஸாருக்குக் கொடுத்தார். அதுதான் இவ்வழக்கின் முக்கிய சாட்சியாகவும், திருப்புமுனையாகவும் அமைந்தது.
ஜோஸ் தாமஸ் இதுகுறித்து இந்து தமிழ் திசையிடம் கூறுகையில், “பகவல்சிங்கும், அவர் மனைவியும் மிக சாதாரணமானவர்களாகவே எங்களுக்குத் தெரிந்தார்கள். பகவல்சிங் ஆயுர்வேத சிகிச்சை செய்வார். ஷபி அடிக்கடி ஸ்கார்பியோ காரில் அவரைத்தேடி வருவார். இந்தப்பகுதிவாசிகளுக்கு பகவல்சிங் தம்பதியினரால் சிறுதொந்தரவுகூட கிடையாது. அதனால்தான் அனைவரும் நரபலி குறித்துக் கேள்விப்பட்டதும் அதிர்ந்துவிட்டோம்” என்றார்.
பத்மா, ரோஸ்லினின் உறவினர்களால் அடையாளம் காண முடியாத அளவுக்கு அவர்களின் உடல்கள் உருக்குலைந்து இருந்தது. இந்நிலையில் அந்த உடல்களை அடையாளம் காணும்வகையில் டி.என்.ஏ சோதனைக்காக கோட்டயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட் டுள்ளது.
சமைத்து சாப்பிட்டார்களா?
ஷபி மீது ஏற்கெனவே 75 வயது மூதாட்டியை பாலியல் வன்மம் செய்த வழக்கும் இருக்கிறது. நரபலி கொடுக்கப்பட்ட பெண்களின் உடல்களை பல துண்டுகளாக வெட்டி, அதில் சில துண்டுகளை சமைத்து சாப்பிட்டதாக போலீஸ் விசாரணையில் லைலா தெரிவித்ததாக கூறப்படுகிறது. நரபலி விவகாரத்தில் அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள் கேரள மக்களை மிரள வைத்துள்ளது.