கனவரெல்ல தோட்ட தொழிலாளியின் மரணம் குறித்து உடனடி விசாரணைகளை மேற்கொள்ள அமைச்சர் உத்தரவு

நமுனுகுல பெருந்தோட்ட நிறுவனத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணைகளை நடத்துமாறு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார உத்தரவிட்டுள்ளார்.

இந்த மரணம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சின் செயலாளர் மற்றும் அமைச்சின் பொது ஆணையாளர் நாயகத்திற்கு  அமைச்சர் நாணயக்கார பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும் நிபுணத்துவம் இல்லாத தொழிலில் ஊழியரை வலுக்கட்டாயமாக அமர்த்தியதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதா? என்பதை கண்டறிவதற்கும் உத்தரவிட்டுள்ளார்.

அவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றிருந்தால் தொழில் சட்டத்தின் கீழ் தவறு செய்பவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

ஒக்டோபர் 9ஆம் திகதி, தோட்டக் கம்பனிக்கு சொந்தமான கனவரெல்ல தோட்ட இருபத்தைந்து வயதுடைய ஹர்ஷன் கணேஷ்மூர்த்தி என்ற தொழிலாளியே இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

பதுளை சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் மின்சாரம் தாக்கி மரணம் ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கிடைத்த ஊடகச் செய்திகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில், உடனடியாக விசாரணைகளை நடத்தி, தொழில் சட்டத்திற்கு அமைவாக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் மனுஷ நாணயக்கார பணிப்புரை விடுத்துள்ளார் .

K.Sayanthiny

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.