நேட்டோவில் உக்ரைன் இணைந்தால் 3-ம் உலகப் போர் உறுதி: ரஷ்ய அதிகாரி எச்சரிக்கை

மாஸ்கோ: நேட்டோவில் உக்ரைன் இணைந்தால் மூன்றாம் உலகப் போர் மூளுவது உறுதி என்று ரஷ்ய அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் வேகமெடுத்துள்ள நிலையில், ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணைச் செயலர் அலக்ஸாண்டர் வெனடிக்டோவ் டாஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர், ‘நேட்டோவில் இணைய உக்ரைன் ஃபாஸ்ட் ட்ராக் விண்ணப்பம் செய்துள்ளது. இது நிச்சயமாக போரை உக்கிரமாக்கும் என்று ஆட்சியாளர்களுக்கு தெரியாமல் இருக்காது. இருந்தும் உக்ரைன் இவ்வாறு செய்துள்ளது.

இதற்கிடையில், உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகளும் தொடர்ந்து பல்வேறு உதவிகளைச் செய்துவருகின்றன. இவ்வாறாக மேற்கத்திய நாடுகள் உதவி செய்து ரஷ்யாவுக்கான நேரடி களப் போட்டியாளராக உருவெடுத்து வருகின்றன. உக்ரைனுக்கு தங்கள் கூட்டமைப்புக்குள் இடம் தருவது என்பது தற்கொலைக்கு சமமானது என்று நேட்டோ நாடுகளுக்கே தெரியும்.

ரஷ்யா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது. உக்ரைன் தன்னை நேட்டோ படையுடனோ அல்லது அமெரிக்காவின் ஆட்டுவிப்புக்கு ஆடும் வேறு கூட்டமைப்புகளிலோ தன்னை இணைக்குமானால் நிச்சயம் அதற்கான விளைவுகளை சந்திக்கும். நேட்டோவில் உக்ரைன் இணைந்தால் மூன்றாம் உலகப் போர் மூளுவது உறுதி” என்றார்.

நேட்டோ கூட்டமைப்புடன் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, அந்நாட்டின் மீது கடந்த பிப்ரவரி முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. உலக நாடுகளின் கண்டனங்களுக்கு இடையில் 7 மாதங்களுக்கும் மேலாக இந்தப் போர் நீடித்து வருகிறது. இந்நிலையில், நேட்டோவுடன் இணைவதற்கான முயற்சிகளை உக்ரைன் தீவிரப்படுத்துவதால் ரஷ்யாவும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.