மதுரை: தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுகள் கிடைப்பதை தடுப்பது எப்படி என்பது குறித்து, ஒன்றிய, மாநில அரசுகள் தரப்பில் பதிலளிக்குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுகள் கிடைப்பது குறித்து ஐகோர்ட் மதுரை கிளை தானாக முன் வந்து விசாரணை செய்கிறது. இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் நேற்று விசாரித்தனர். கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் ஆஜராகி, ‘‘ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்து தமிழக அரசு சட்டமியற்றியுள்ளது. விழிப்புணர்வுக்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. பப்ஜி, ஃப்ரீ பயர் போன்ற விளையாட்டுக்களை யாரும் விளையாடக் கூடாது என்பதில் தமிழக அரசும் உறுதியாக உள்ளது’’ என்றார்.
அப்போது நீதிபதிகள், ‘‘பப்ஜி, ஃப்ரீ பயர் போன்ற விளையாட்டுக்களால் குழந்தைகள் விளையாட்டு மைதானத்தையே மறந்துவிட்டனர். இதற்கு இளைஞர்கள் அடிமையாவதை தடுக்கும் வகையில் அரசுகள் சட்டம் கொண்டு வந்துள்ளது அக்கறையின் வெளிப்பாடாகும். இதை இளைய சமுதாயத்தின் மீதான அக்கறையாக மட்டும் பார்க்கக் கூடாது. ஒட்டுமொத்த தேசத்தின் மீதான அக்கறை. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை தடுக்க முடியாது. ஆனால் இளைஞர்கள் சரியான முறையில் பயன்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும்’’ என்றனர்.
பின்னர் நீதிபதிகள், ‘‘ஆன்லைன் விளையாட்டுக்களின் அட்டகாசத்தை தடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இளைய தலைமுறையினரின் வாழ்க்கையை சேதப்படுத்தும் இவற்றிற்கு தடை இருந்தபோதிலும் அனுமதிக்கப்படுகிறது. இந்த வகையான ஆன்லைன் விளையாட்டுகள் எப்படிப்பட்டவை என்பது குறித்தும், தடை செய்யப்பட்ட விளையாட்டுகள் கிடைப்பதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளும், வழக்கறிஞர்களும் உரிய தகவல்களுடன் அறிக்கையளிக்க வேண்டும். ஒன்றிய தகவல் தொடர்பு அமைச்சகம், தகவல் தொழில்நுட்பத்துறை செயலர், தமிழக உள்துறை செயலர், சைபர் கிரைம் ஏடிஜிபி, சமூக நலத் துறை, பள்ளி கல்வி மற்றும் கல்லூரி கல்வி இயக்குநர்கள், யூடியூப், கூகுள் தரப்பிலும் பதிலளிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை அக். 27க்கு தள்ளி வைத்தனர்.