கட்சிரோலி: மகாராஷ்டிராவில் கடந்த 10 மாதங்களில் 13 பேரை அடித்து கொன்ற ஆட்கொல்லி புலி, கட்சிரோலி வனப்பகுதியில் வனத்துறையினரிடம் சிக்கியது. மகாராஷ்டிரா மாநிலம், கட்சிரோலியில் உள்ள வாட்ஷா வனப்பகுதியில் சுற்றித் திரிந்த `சிடி-1’ என்ற பெயர் கொண்ட புலி, மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கி வந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்த மாதம் வரையிலான காலத்தில் மட்டும் அந்த ஆட்கொல்லி புலி 13 மனிதர்களை அடித்து கொன்றுள்ளது. இது தொடர்பாக வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: நாக்பூர் வனத்துறை முதன்மை தலைமை காப்பாளர் வனத்துறையினருடன் கடந்த 4ம் தேதி நடத்திய ஆலோசனை கூட்டத்தில், இந்த புலியை விரைவாக பிடிக்கும்படி எதிர்க்கட்சிகளை அவர் வலியுறுத்தினார்.
வாட்ஷாவில் 6 பேர், பாந்த்ரா மாவட்டத்தில் 4 பேர், சந்திராப்பூர் மாவட்டம் பரமாபுரி வனப்பகுதியில் 3 பேர் என விதர்பா மண்டலத்தில் 13 பேரை அந்த புலி கடந்த 10 மாதங்களில் அடித்து கொன்றிருந்தது. இதையடுத்து டபோடா புலிமீட்பு குழு, சந்திராப்பூர் அதிரடிப்படை உள்ளிட்ட பல்வேறு படையினர் இணைந்து பணியாற்றினர். இதை தொடர்ந்து நேற்று காலை வாட்ஷா வனப்பகுதியில் இந்த புலியை அந்த குழுவினர் பிடித்தனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். பிடிபட்ட புலியை நாக்பூரில் உள்ள கோரேவாடா விலங்குகள் மீட்பு மையத்திற்கு அனுப்பிவைத்தனர்.