‘அடிமையாக இருக்காதே, குடிமகனாக இரு’ – ஜி ஜின்பிங்கிற்கு எதிராக சீனாவில் கவனம் ஈர்த்த போராட்டம்

பெய்ஜிங்: சீன அதிபராக ஜி ஜின்பிங்கே மீண்டும் தேர்ந்தெடுக்கப்போவதாகச் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ள நிலையில் அவருக்கு எதிராக வெளிப்படையான போராட்டம் நடந்திருப்பது கவனம் ஈர்த்துள்ளது.

சீனாவில் போராட்டங்கள் அரிதானவை, மேலும் சீன ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் பற்றிய செய்திகள் இன்னும் அரிதானவை. ஆனால் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருநாளுக்கு முன்னதாக சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற பதாகைகள் அந்நாட்டின் தலைநகர் பெய்ஜிங்கில் தொங்கவிடப்பட்டிருக்கின்றன. அதிபர் ஜி ஜின்பிங் கடைப்பிடித்து வரும் கோவிட் கொள்கை மற்றும் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்கும் பதாகைகளின் படங்கள்தான் சீனாவின் தற்போதைய இன்டர்நெட் சென்சேஷன்.

சீன மொழியில் எழுதப்பட்டு வெளியாகியிருக்கும் பதாகையில், “கரோனா பரிசோதனை வேண்டாம், உணவு வேண்டும். லாக்டவுன் வேண்டாம், சுதந்திரம் வேண்டும். பொய்கள் வேண்டாம், கண்ணியம் வேண்டும். கலாசாரப் புரட்சி வேண்டாம், சீர்திருத்தம் வேண்டும். பெரும் தலைவர் வேண்டாம், ஓட்டுரிமை வேண்டும். அடிமையாக இருக்காதே, குடிமகனாக இரு” எனச் சொல்லப்பட்டுள்ளது.

பெய்ஜிங்கில் உள்ள சிடோங் பாலத்தில் இந்தப் பதாகை தொங்கவிடப்பட்டுள்ளது. அதே பாலத்தில் தொங்கவைக்கப்பட்டுள்ள மற்றொரு பதாகையில், “வேலை நிறுத்தத்தில் ஈடுபடுங்கள், சர்வாதிகாரியும் தேசத் துரோகியுமான ஜி ஜின்பிங்கை அகற்றுங்கள்” என்று எழுதப்பட்டிருந்தது. இந்த பதாகைகள் கொண்ட புகைப்படங்களோடு அந்நாட்டு சமூக வலைதளங்களில் “நான் பார்த்தேன்” (I saw it) ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. எனினும், இந்த அமைதி புரட்சிக்கு காரணமானவர்கள் யார் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

நாளை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு நடைபெற இருக்கிறது. ஐந்தாண்டுக்கு ஒரு முறை நடைபெறும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டில் கட்சியின் புதிய பொதுச் செயலரை தேர்ந்தெடுப்பது வழக்கம். சீனாவில் ‘ஒரு கட்சி ஆட்சி’ நடைபெறுகிறது. அந்தவகையில், சீனாவில் அதிபர் பொறுப்பை விடவும் கட்சியின் பொதுச் செயலர் பொறுப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

தற்போது சீன அதிபரான ஜி ஜின்பிங்தான் கட்சியின் பொதுச் செயலராக உள்ளார். இந்நிலையில், நடைபெறவிருக்கும் தேசிய மாநாட்டில் மீண்டும் அவரே பொதுச் செயலராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார் என்றும் அதன் அடிப்படையில் அடுத்த ஆண்டு, மூன்றாவது முறையாக சீன அதிபராக அவரே பொறுப்பேற்பார் என்றும் கூறப்படுகிறது. அப்படியான நிலையில் அவருக்கு எதிராக வெளிப்படையாக நடந்துள்ள போராட்டம் உலக அளவில் கவனம் ஈர்க்கும் சம்பவமாக மாறியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.