கீவ்/பிரஸெல்ஸ்: ரஷ்யா மீது ஐ.நா.வில் கண்டனத் தீர்மானம் கொண்டு வரப்பட்ட மறுநாளே உக்ரைனின் 40 நகரங்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி உள்ளது. இதில், பல குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்தன. இதுகுறித்து ரஷ்ய ஊடக தகவல்கள் தெரிவிப்பதாவது:
குறிப்பாக, துறைமுக நகரமான மைகோலைவ் மீது ரஷ்யா ஏராளமான குண்டுகளை வீசியது. இதில், ஐந்து மாடி கட்டிடமொன்று சேதமடைந்தது. இடிபாடுகளை அகற்றும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
தலைநகரான கீவிலும் வெடிபொருள் ட்ரோன் மூலம் ரஷ்யா தாக்குதலில் ஈடுபட்டது.
டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள நிகோபோல் நகரில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 30-க்கும் மேற்பட்ட பல மாடி மற்றும் தனியார் வீடுகள்சேதமடைந்தன.மேலும், எரிவாயு குழாய்கள் மற்றும் மின் இணைப்புகள் சேதமடைந்தன. இதனால், 2,000-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
பதிலடியாக, உக்ரைன் விமானப் படை 25 ரஷ்ய இலக்குகளை குறிவைத்து 32 தாக்குதல்களை மேற்கொண்டது. இவ்வாறு ஊடக தகவல்கள் தெரிவித்தன.
உக்ரைனில் கைப்பற்றிய 4 பிராந்தியங்களை தன்னிச்சையாக ஓட்டெடுப்பு நடத்தி ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது. ரஷ்யாவின் இந்த சட்டவிரோத இணைப்பு முயற்சியை கண்டித்து ஐ.நாவில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஐ.நா.வில் மொத்தமுள்ள 193 உறுப்பு நாடுகளில் 143 நாடுகள் இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. வாக்கெடுப்பு நடத்தப்பட்ட அடுத்த நாளில் ரஷ்யா இத்தகைய தாக்குதலை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
‘நேட்டோ’ எனப்படும் வடக்குஅட்லாண்டிக் கூட்டணியில் சேர உக்ரைன் அனுமதிக்கப்படும் பட்சத்தில் அது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என்று ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்பு கவுன்சில் துணை செயலர் அலெக்ஸாண்டர் வெனெடிக்டோவ் நேற்று எச்சரிக்கை விடுத்தார். மேலும், உக்ரைனுக்குஉதவும் நாடுகளெல்லாம் ரஷ்யாவுடன் நேரடியாக மோதுவதாகவே எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.