காலடி: கர்நாடகாவில் நடந்த நடைபயணத்தின் போது ராகுல்காந்தி தண்ணீர் தொட்டியின் மீது ஏறி தேசியக் கொடியை காட்டி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். காங்கிரஸ் கட்சியின் சார்பில் அதன் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் இந்திய ஒற்றுமை நடைபயணம் நடைபெற்று வருகிறது. தற்போது கர்நாடகாவில் அந்த நடைபயணம் நடைபெற்று வரும் நிலையில், நேற்று காலடியில் நடந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்றார்.
அவர் மூவர்ண தேசியக் கொடியை கையில் ஏந்தியவாறு, அங்கிருந்த தண்ணீர் தொட்டியின் மேல் ஏறிச் சென்று கொடியை அசைத்தார். அப்போது மக்கள் ராகுல்காந்தியை பார்த்து தொண்டர்கள் ஆரவாரத்துடன் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ராகுலுடன் தண்ணீர் தொட்டியின் மீது மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோரும் உடனிருந்தனர்.
இதுதொடர்பான வீடியோவை காங்கிரஸ் கட்சி பதிவிட்டுள்ளது. மேலும், மூவர்ணக் கொடி நம் அனைவரையும் ஒன்றிணைக்கிறது; இந்திய ஒற்றுமை நடைபயணம், மூவர்ணக் கொடியின் உண்மையான சாரத்தை எடுத்து காட்டுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.