ஜன்சார்கா: “நாட்டின் முதலாவது பிரதமர் நேரு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து சட்டத்தை அமல்படுத்தி பிரச்னைக்கு வழி வகுத்தார். ஆனால், மோடி அதற்கு தீர்வு கண்டார்,’ என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார். குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பாஜ கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு வரும் டிசம்பர் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி, நவ்சாரி மாவட்டத்தில் உள்ள உனாய் பகுதியில் பாஜ வின் `கவுரவ யாத்ரா’ நிகழ்ச்சியை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், “நாட்டின் முதலாவது பிரதமராக இருந்த நேரு, காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து சட்டத்தை அமல்படுத்தியதன் மூலம் பிரச்னைகளுக்கு வழி வகுத்தார். இதனால், காஷ்மீரை இந்தியாவுடன் முழுமையாக ஒருங்கிணைக்க முடியவில்லை. ஆனால், பிரதமர் மோடி இந்த சிறப்பு அந்தஸ்து சட்டத்தை ரத்து செய்து, ஒரே அடியில் இப்பிரச்னைக்கு தீர்வு கண்டார். இதன் மூலம், இந்தியாவுடன் காஷ்மீர் முழுமையாக இணைக்கப்பட்டு இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் குஜராத்தில் ஆண்டுக்கு 200 நாட்கள் ஊரடங்கு அமலில் இருந்தது. மோடி இங்கு முதல்வரான பிறகு, கடந்த 20 ஆண்டு கால பாஜ ஆட்சியில் ஊரடங்கு அமல்படுத்தப்படவில்லை,’ என்று பேசினார்.