சென்னை: வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக பணிகள் முடிக்கப்படும் என்றும், கடந்த ஆண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் இந்த ஆண்டு இருக்காது என்றும் சென்னை மேயர் பிரியா தெரிவித்தார்.
சென்னை ரிப்பன் மாளிகையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள், குடிநீர் வழங்கல், மின்வாரிய துறை போன்ற பல்வேறு துறை அதிகாரிகளுடன் மாநகராட்சி மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மேயர் பிரியா, “சிங்கார சென்னை திட்டத்தில் 97 சதவிகிதம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. உலக வங்கி திட்டத்தில் 94 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
கொசஸ்தலை ஆறு பணிகள் 2024ம் ஆண்டிதான் முடிவடையும். சென்னை மாநகராட்சி பொறுத்த வரை 33 கால்வாய்களில் 53 கிலோ மீட்டர் தூரம் தூர்வாரப்பட்டுள்ளது. சுரங்க பாதைகளில் அதிக நீர் தேங்கினால் சென்னை மாநகராட்சி வளாகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் ஒலி எழுப்பும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. 166 பாதுகாப்பான இடங்கள் நிவாரண மையதிற்கு தயார் நிலையில் உள்ளது. சிந்தாதிரிப்பேட்டையில் 10,000 பேருக்கு உணவு சமைப்பதற்கான சமையல் அறையை தயார் செய்து வருகிறோம்.
மாநகராட்சிக்கு சொந்தமான மோட்டார்கள் தவிர அவசர தேவைக்கு மேட்டார்கள் வாங்குவது தொடர்பான ஏற்பாடுகளும் செய்து வருகிறோம். மரம் விழும் நிலையில் உள்ள இடங்களில் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள செய்ய அறிவுறுத்தி உள்ளோம். 50 படகுகளும், 40 நீச்சல் வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர். வானிலையை யாராலும் கணிக்க முடியாது, இதற்கு முன்பு போல் 10 நாட்கள் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலை இல்லாமல் 24 மணி நேரத்தில் தண்ணீரை வெளியேற்றும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடங்களில் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு ஏற்படுத்துவது குறித்து முதல்வர் மற்றும் துறை சார்ந்த அமைச்சர் அறிவுறுத்தல் பேரில், போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஒப்பந்ததாரர்களே மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேரிடர் காலங்களில் அந்தந்த பகுதி மக்கள் பிரதிநிதிகள், மண்டல அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து தகவல்களை கேட்டறிந்து, காலத்திற்கு தகுந்தாற் போல செயல்பட அறிவுறுத்தி உள்ளோம்” என்று மேயர் பிரியா கூறினார்.