புதுடில்லி:சென்னை – பெங்களூரு – மைசூரு இடையிலான, ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ ரயில் சேவை நவ., 10ல் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிநவீன வசதிகளுடன் கூடிய அதிவிரைவு வந்தே பாரத் ரயில் சேவை, பல்வேறு மாநிலங்களிலும் துவங்கப்பட்டு வருகின்றன. இந்த ரயிலின் மூன்றாவது மற்றும் நான்காவது சேவைகள் குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் துவக்கப்பட்டன.
ஹிமாச்சல பிரதேசத்தின் உனா மாவட்டத்தின் அம்ப் அந்தவுரா ரயில் நிலையத்தில், வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி நேற்று முன்தினம் துவக்கி வைத்தார்.
குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேச சட்டசபைக்கு இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடக்கவுள்ளது.
இந்நிலையில், வந்தே பாரத் ரயில் சேவை தென் மாநிலங்களில் விரைவில் துவங்கப்பட உள்ளது. அடுத்த ஆண்டு கர்நாடகா சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், சென்னை – பெங்களூரு – மைசூரு இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை நவ., 10ல் துவங்க உள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.வந்தே பாரத் ரயில், அதிகபட்சமாக மணிக்கு 180 கி.மீ., வேகத்தில் செல்லும். தற்போது நம் நாட்டில் இயங்கும் ரயில்களில் அதி வேகத்தில் செல்லக் கூடிய ரயில் இது தான்.
இந்த ரயில் தானியங்கி கதவுகளால் ஆனது. அதாவது ரயில், ஸ்டேஷனுக்கு வந்ததும் கதவுகள் தானாகத் திறக்கப்பட்டு, புறப்படும்போது மூடிக்கொள்ளும் வசதிகள் உடையது. குளிர்சாதன வசதி, ‘வைபை’ வசதி, கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட அனைத்தும் இதில் இடம் பெற்றிருக்கும். இருக்கைகளும் தரமானதாக இருக்கும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement