நாக்பூர்: நக்சலைட்களுடன் தொடர்பு வைத்திருந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா உட்பட 6 பேரை மும்பை உயர் நீதிமன்ற கிளை விடுதலை செய்துள்ளது. மகாராஷ்டிராவில் நக்சல்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக டெல்லி பல்கலைக் கழக முன்னாள் பேராசிரியர் ஜி.என் சாய்பாபா உள்பட 6 பேர் மீது, உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை 2017ம் ஆண்டு விசாரித்த கட்சிரோலி மாவட்ட நீதிமன்றம், 6 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து 6 பேரும் மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் மேல்முறையீடு செய்தனர்.
இதை விசாரித்த நீதிபதிகள் ரோகித் தேவ், அனில் பன்சாரே அமர்வு, நேற்று 6 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கை தொடர்ந்தவர்களில் ஒருவரான நரோட்டே விசாரணையின்போது இறந்து விட்டார். மற்ற 5 பேரும் நாக்பூர் மத்திய சிறையில் 6 ஆண்டுகளாக அடைக்கப்பட்டு உள்ளனர். சாய்பாபா உடல் நலம் பாதிக்கப்பட்டவர். அவர் சக்கர நாற்காலியில்தான் நடமாடுகிறார். இந்த 5 பேரையும் உடனடியாக விடுதலை செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டதை தொடர்ந்து, அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.