வடகிழக்கு பருவமழை: 15 துறைகளுக்கு சென்னை மாநகராட்சி முக்கிய அறிவுறுத்தல்

சென்னை: வடகிழக்கு பருவமழையை எதிர் கொள்வது தொடர்பாக 15 துறைகளுக்கு சென்னை மாநகராட்சி முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, அனைத்து துறை அதிகாரிகளுடான ஆலோசனை கூட்டம், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் இன்று (அக்.14) நடந்தது. இந்த கூட்டத்தில் மாநகராட்சி அதிகாரிகள் பேசுகையில், “சென்னை மாநகராட்சி பராமரிக்கும் 1,356 கி.மீ., மழைநீர் வடிகால்களை துார்வார 71.28 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஜூன் 3ம் தேதியில் இருந்து துாவாரும் பணிகள் துவங்கப்பட்டு 1,193 கி.மீ., என, 88 சதவீத பணிகள் முடிந்துள்ளன. மீதமுள்ள பணிகள் வரும் 20ம் தேதிக்குள் முடிக்கப்படும். அதேபோல், சேதமடைந்த நிலையில் இருந்த மேஹொல் மூடிக்கு பதிலாக புதிய மூடிகள் போடப்பட்டுள்ளன.

கொசஸ்தலை, கூவம், அடையாறு மற்றும் 30 நீர்வழித்தடங்களில் நவீன இயந்திரங்கள் வாயிலாக வண்டல், ஆகாய தாமரைகள் அகற்றப்பட்டுள்ளன. மேலும், சுரங்கப்பாதை துார்வாரப்பட்டதுடன், தண்ணீர் தேங்கக்கூடிய 113 இடங்களில் மோட்டார் பம்புகள் அமைக்கப்பட்டுள்ளன. 15 மண்டலங்களிலும் 503 மோட்டார் பம்புகள் அமைக்கப்படும்.

மேலும், 20 ஆயிரத்து 288 மரங்களின் கிளைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அகற்றப்பட்டுள்ளன. தண்ணீர் தேங்க வாய்ப்பு இருப்பதாக 109 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அங்கு, மீன்வளத்துறையுடன் இணைந்து படகுகள் தயார் நிலையில் வைக்கப்படும். மாநகராட்சிப் பள்ளிகள், சமுதாய கூடங்கள், திருமண மண்டபங்கள் என 169 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. 44 நடமாடும் மருத்துவ முகாம்கள் தயார் நிலையில் உள்ளன.

பொதுமக்களின் புகார்களைப் பெற, மாநகராட்சியின் 1913 என்ற கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும். ஒரே நேரத்தில் 1,500 பேருக்கு உணவு தயாரிக்கும் வகையில், பொது சமயலறை தயார் நிலையில் உள்ளது. மின் கம்பங்கள், பாக்ஸ், ஒயர்கள் ஆகியவை சரிபார்க்கப்பட்டு, பழுதுகள் சரி செய்யப்பட்டுள்ளன. கடந்த 2015ல் வெள்ளம் பாதித்த 52 இடங்களில் தேசிய மீட்புக் குழுவினர் தயார் நிலையில் இருப்பார்கள்” இவ்வாறு பேசினார்கள்.

15 துறைகளுக்கான அறிவுரை

  • நீர்நிலை வாயிலாக, கடலுக்கு நீர் செல்லும் வகையில், நீர்வளத்துறையினர் முகத்துவாரங்களை துார்வாரி இருத்தல் வேண்டும்.
  • நெடுஞ்சாலை துறையின் மழைநீர் வடிகால்களை துார்வாரி பராமரிப்பதுடன், மோட்டார் பம்புகள் வைத்து மழைநீர் தேக்கம் அடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • பாதாள சாக்கடை மேன்ஹொல் மூடிகள் சேதமடைந்திருந்தால் புதிய மூடிகளை பொருத்த குடிநீர் வடிகால் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவுநீர் பம்பிங் நிலையங்களில் கூடுதல் மோட்டார்கள் அமைக்கப்பட வேண்டும்.
  • பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவை உறுதி செய்தல், பாதிக்கப்பட்ட பகுதிகள், நிவாரண முகாம்களுக்கு தடையில்லாமல் குடிநீர் விநியோகிக்க வேண்டும்.
  • சென்னையில் மின்தடை ஏற்படும்போது உடனடியாக சரி செய்வதற்கான குழு 24 மணி நேரமும் தயார் நிலையில் இருத்தல் வேண்டும். மின் கசிவுகள் ஏற்படாத வகையில் அனைத்து பழுதுகளையும் சரிபார்க்க வேண்டும். மாநகராட்சியின் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்கு, ஒரு மின் வாரிய உதவி பொறியாளர், ஒரு காவல்துறை எஸ்.ஐ. ஆகியோர் நியமிக்கப்பட வேண்டும்.
  • அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும், பணிகள் நடைபெறும் இடங்களிலும் உயர் அழுத்த மின் மோட்டார்கள் தயார் நிலையில் வைத்திருந்தல் அவசியம்.
  • தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சாலை ஓரத்தில் உள்ள வடிகால்களுக்கு உரிய தடுப்புகள் ஏற்படுத்த வேண்டும். தேவையான இடங்களில் மின் மோட்டார்கள் அமைக்க வேண்டும்.
  • மீட்பு பணிகளில் ஈடுபடும் போலீசாருக்கு ஓயர்லெஸ் கருவி வழங்கப்பட வேண்டும்.
  • வெள்ள பாதிப்பு ஏற்படும் இடங்களுக்கு உடனடியாக செல்லும் வகையில் தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.