வருமானம் ரூ.1,150 கோடி; கடன் ரூ.2,500 கோடி…! அர்விந்த் மில்ஸின் திருப்புமுனைக் கதை!

தொழில் துறையைப் பொறுத்தவரை, மூன்று தலைமுறைகளைத் தாண்டுவது என்பதே பெரிய சவால். ஆனால், 400 ஆண்டுகளுக்கு மேலாக 17 தலைமுறைகளாக தொழில் குடும்பமாக இருந்து வருகிறது அர்விந்த் குழுமம். அக்பர் முதல் ஜவகர்லால் நேரு வரை அர்விந்த் குழுமத்துக்கு நெருக்கம். இந்த குழுமம் பல நெருக்கடிகளையும் சவால்களையும் கடந்து வந்திருக்கிறது. இதில் தற்போதைய தலைவர் சஞ்சய் லால்பாய் கையாண்ட சில விஷயங்களை மட்டும் இந்த வார திருப்புமுனையில் பார்க்கலாம்.

Arvind

பல தொழில் நிறுவனங்களை உருவாக்கினார்…

சஞ்சய் லால்பாய் இளங்கலை முடித்தபிறகு குடும்ப நிறுவனத்தில் இணைந்திருக்கிறார். ஆனால், பெரிய வாய்ப்புகள் இல்லாததால் எம்.பி.ஏ படிக்க நினைக்கிறார். அகமதாபாத்தைத் தலைமையாகக் கொண்டு செயல்படும் பாரம்பரிய நிறுவனம் என்பதால், ஐ.ஐ.எம் அகமதாபாத்தின் நிறுவனர்களில் இவருடைய தாத்தாவும் ஒருவர். இருந்தாலும் போதுமான மதிப்பெண் கிடைக்காததால், பஜாஜ் இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மெண்டில் இணைந்து படித்தார். இவருடன் படித்தவர்தான் திரைப்பட இயக்குநர் மணிரத்னம் என்பது கூடுதல் செய்தி.

படித்து முடித்தவுடன் 1977-ம் ஆண்டு குழுமத்தில் மீண்டும் இணைந்தார். ஆனால், பெரிய அளவுக்கு முடிவுகள் எடுக்க முடியாத சூழல் இருந்ததால், அதிக நேரம் கிடைத்தது. அதனால் ஒரு சீரியல் தொழில்முனைவோர் மனநிலையில் பல தொழில் நிறுவனங்களை உருவாக்கி இருக்கிறார். பேஷன், ஏர் கண்டிஷன், டிரேடிங், கெமிக்கல் என 30 -க்கும் மேறப்பட்ட நிறுவனங்களை உருவாக்கினார்.

ஒரே சமயத்தில் பல விஷயங்களை செய்யலாமா?

‘‘யாராவது என்னிடம் ஏதாவது ஒரு ஐடியா கூறினால் அதனை ஒரு வாய்ப்பாக கருதி முதலீடு செய்ய தொடங்கி இருக்கிறேன். இத்தனைக்கும் என்னிடம் பணம் இல்லை. குடும்பத்தில் இருந்து பணம் கொடுக்கவில்லை. கடன் வாங்கி முதலீடு செய்தேன். 1979 முதல் 1985-ம் ஆண்டு வரை இதுபோன்ற பல பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட்டிருந்தேன்.

இதில் மூன்று நிறுவனங்களை தவிர, மற்ற அனைத்து நிறுவனங்களையும் மூடிவிட்டேன். ஒரே சமயத்தில் பல விஷயங்களை செய்ய வேண்டும் என்னும் யோசனை வரும். நம்மால் செய்ய முடியும் என்றும் தோன்றும்; ஆனால், செய்யக் கூடாது என்பதுதான் என்னுடைய ஆலோசனை என சஞ்சய் கூறியிருக்கிறார்.

ஜீன்ஸ்

புதிதாக வந்த வாய்ப்பு…

இதனால் தொழிலில் கவனம் செலுத்தினார். அந்த காலத்தில் லைசென்ஸ் ராஜ் இருந்தது. பெரிய மில்களுக்கு அரசு அனுமதி வழங்கவில்லை. அதனால், சிறிய பவர்லூம்கள் பெருகத் தொடங்கின. பவர்லூம்களுக்கு எந்தவித கட்டுப்பாடுகளும் கிடையாது. அதே சமயம், மில்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் இருந்தன. மேலும், தொழிற்சங்களும் இருந்ததால், அகமதாபாத்தில் இருந்த பல மில்கள் மூடப்பட்டன. அரசாங்கத்துக்கு எதிராகப் போராடவும் முடியாது. அதே சமயம், தொழிலை நிறுத்தவும் முடியாது என்பதுதான் சுழல்.

இந்தச் சூழலில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்றார் சஞ்சய் லால்பாய். ஏதேனும் மாற்று வழி கண்டுபிடிக்காவிட்டால் நிறுவனத்தை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை. அதுவரை இந்தியாவில் மட்டுமே கவனம் செலுத்திவந்தது அர்விந்த் குழுமம்.

தவிர்க்க முடியாத நிறுவனமாக…

சர்வதேச அளவில் அர்விந்த் குழுமத்தின் ஜீன்ஸ் ஆடைகள் பிரபலமாகி வந்தன. இந்த சமயத்தில், பாலிவுட் படங்களில் ஜீன்ஸ் ஆடைகள் வரத்தொடங்கின. அதனால் இந்த ஆடைகளைத் தயாரிப்பது மற்றும் ஏற்றுமதி செய்யும் பணியைத் தொடங்கியது. முழுவதும் வேறு டெக்னாலஜி என்பதால், போட்டியும் கிடையாது. சர்வதேச அளவில் டெனிம் ஆடைகள் தயாரிப்பில் முக்கியமான நிறுவனமாக மாறியது. ஜெர்மனியில் இருந்து மெஷின்களை இறக்குமதி செய்து டெனிம் ஆடைகள் உற்பத்தி செய்யப்பட்டன.

மேலும், சர்வதேச பிராண்டுகளான ஆரோ, யூஎஸ் போல, ஜி.ஏ.பி, டாமி ஹில்பிகர் உள்ளிட்ட பல சர்வதேச பிராண்டுகளை இந்தியாவுக்கு கொண்டுவந்தது. லீ, ராங்கலர் உள்ளிட்ட பிராண்டுகளையும் இந்தியாவுக்குக் கொண்டுவந்தது. கிட்டத்தட்ட டெனிம் ஆடைகளில் தவிர்க்க முடியாத நிறுவனமாக இருந்தது அர்விந்த். இவ்வளவு பிராண்டுகள் இருந்ததால், ரீடெய்ல் ஸ்டோர்களையும் அமைத்தது அர்விந்த் குழுமம்.

சஞ்சய் லால்பாய்

கஷ்டமோ கஷ்டம்…

எப்போது அனைத்தும் சரியாக நடக்கிறதோ, அடுத்து ஒரு பாதாளம் காத்திருக்கிறது என்பது சொல்லப்படாத செய்தி. டெனிம் விற்பனை நன்றாக இருப்பதால், பெரிய ஆலை அமைக்க திட்டமிடப்பட்டது. சுமார் 450 ஏக்கர் ஆலை. இந்தச் சூழலில் பல சிக்கல்கள் உருவாகின. சர்வதேச அளவில் டெனிம் ஆடைகளுக்கான தேவை குறைந்தது. அதனால் விலை குறைந்தது.

மேலும், டெனிம் ஆடைகளை ஏற்றுமதி செய்வதுதான் முக்கியமான வருமானமாக இருந்தது. ஆனால், அந்த சமயத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்தது. அதனால் ஏற்றுமதியும் கைகொடுக்கவில்லை. இதனால் 1,000 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட ஆலை முடிக்க காலதாமதம் ஆனது.

2000-ம் ஆண்டில் குழுமத்தின் கடன் ரூ.2,500 கோடி என்னும் அளவில் இருந்தது. ஆனால், வருமானம் ரூ.1,150 கோடி. கிட்டத்தட்ட திவால் என்னும் சூழல். முதல்முறையாக டிவிடெண்ட் தரமுடியாத சூழலுக்கு நிறுவனம் தள்ளப்பட்டது. கடன் கொடுத்த நிறுவங்களிடம் இருந்து வழக்குகள் குவிந்தன. அதனால் முதலீட்டாளர்களிடம் நேரடியாக சென்று எங்கு தவறு நடந்தது, எப்படி சரிசெய்ய முடியும், இன்னும் ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள் என நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

மனவலிமை!

1997 முதல் 2002-ம் ஆண்டு வரையிலான காலகட்டம் கடுமையான காலகட்டமாக சஞ்சய்க்கு இருந்தது. நண்பர்கள் முதலீட்டாளர்கள் என அனைவரிடத்தில் இருந்தும் தனிமைப்படுத்தப்பட்டார். தனிப்பட்ட சொத்துகளை விற்று கடனை அடைக்க வேண்டி இருந்தது. இதிலிருந்து மீண்டுவந்த பிறகு அவர் கூறியதுதான் அனைவரும் கவனிக்க வேண்டும். ‘சிறப்பாக விளையாடினால் மட்டுமே வெற்றி அடைய முடியாது. சிறந்த மனவலிமை இருந்தால்தான் விளையாட்டிலும் தொழிலிலும் வெற்றி அடைய முடியும்’ என குறிப்பிட்டிருக்கிறார்.

அடுத்த தலைமுறையுடன் லால்பாய்

அடுத்த தலைமுறை!

தற்போது இவரின் இரு மகன்கள் நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்கள். அக்ரோ, வாட்டர் ட்ரீட்மெண்ட், ரியல் எஸ்டேட் என குழுமம் விரிவடைந்திருக்கிறது. அதே சமயம், மெகா மார்ட் ஸ்டோர்கள் விற்பனை செய்திருக்கிறது.

கலவையான செயல்பாடுகளை இந்தக் குழுமம் கொண்டிருந்தாலும், லைசென்ஸ்ராஜ், திவால் நிலையைத் தொட்டு மீண்டது என தன்னுடைய இருப்பைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டிருக்கிறது அர்விந்த் குழுமம்.

(திருப்புமுனை தொடரும்)

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.