பெய்ஜிங்: சீனாவில் அரசியல் எதிர்ப்பு போராட்டங்கள் மிகவும் அரிது. ஜி ஜின்பிங் அதிபரானது முதல் மக்கள் போராட்டங்கள் அடிக்கடி நடந்ததில்லை. ஆனால் தற்போது கரோனா தடுப்பு கொள்கைக்கு எதிராகவும், அதிபர் தலைமைக்கு எதிராகவும் ஆங்காங்கே பேனர்கள் வைக்கப்படுவது போலீஸார் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரோனா கட்டுப்பாட்டு நடவடிக் கைகள் முடிவுக்கு வர வேண்டும். அதிபர் ஜின்பிங் பதவியில் இருந்து வெளியேற வேண்டும் என்று பேனர்கள் வைக்கப்பட்டிருப்பது சமூக ஊடகங்களில் பரவுகின்றன.
இதை தடுக்கும் நடவடிக்கைகளில் சீனாவின் இணையதள சென்சார்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பேனர்களை வைப்பது யார், எப்போது வைக்கப்பட்டன என்ற விவரம் தெரியவில்லை.
இதனால் தலைநகர் பெய்ஜிங் கில் போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சாலையில் செல்வோரிடம்விசாரணை நடத்தப்படுகிறது. பத்திரிகையாளர்களிடம் அடையாள அட்டைகள் வாங்கி பரிசோதிக்கப்படுகின்றன.
சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு வார கூட்டம் தினான்மென் சதுக்கத்தில் உள்ள கிரேட் ஹாலில் தொடங்கியுள்ளது. இதில் 2,300 தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.
தலைநகர் பெய்ஜிங்கில் பாதுகாப்பு மற்றும் கரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மூன்றாவது முறை அதிபராக தொடரவும், வாழ்நாள் வரை அதிபராக இருக்கவும் ஜின்பிங் திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில் சீனாவில் ஜின்பிங் அரசுக்கு எதிராக மக்களிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 100-க்கும் மேற்பட்ட நகரங்களில் மக்கள் வீட்டு கடன் தவணைகள் செலுத் துவதை நிறுத்தியுள்ளனர். கடுமையான கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், சீனாவில் ரியல் எஸ்டேட் தொழிலில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது. வீட்டு கடன் தவணைகள் செலுத்தமாட்டோம் என மக்கள் அச்சுறுத்தல் விடுப் பதால் 40 பில்லியனுக்கும் மேற் பட்ட வீட்டு கடன்கள் அபாயத்தில் உள்ளன.