ஹைதராபாத்: கோவாவில் இருந்து 86 பயணிகளுடன் ஹைதராபாத் நோக்கி புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் திடீரென புகை மூட்டம் சூழ்ந்தது. இதில், பயணிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு அலறத் தொடங்கினர். நிலைமை மிகவும் விபரீதமானதை உணர்ந்த விமானப் பணிப் பெண்கள் ‘‘உங்களுக்கு பிடித்தமான கடவுளை வேண்டிக் கொள்ளுங்கள்’’ என்று கூறியது மேலும் அச்சத்தை அதிகரித்தது.
இந்த நிலையில், ஸ்பைஸ்ஜெட் விமானம் ஹைதராபாத் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டு. பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதில், ஒரு பெண் பயணிக்கு மட்டும் காயம் ஏற்பட்டு ஜூப்ளி ஹில்ஸில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
விமானத்தில் முதல் முறையாக நண்பர்களுடன் பயணித்த ஹைதராபாத் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஸ்ரீகாந்த் கூறியதாவது:
திடீரென விமானத்தின் விளக்குகள் எரிந்தன. இருக்கைகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட விமான ஊழியர்கள் குடும்பத்துக்காக கடவுளை பிரார்த்தனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர். முதல் முறையாக விமானத்தில் பயணித்த எங்களுக்கு இந்த அறிவிப்பு பேரிடியாக இருந்தது. தரையிறங்கும் போது அவசர கதவுகள் திறந்தவுடன் குதித்து ஓடுங்கள் என்று அறிவுறுத்தினர்.
இந்த சம்பவத்தின் வீடியோக் கள் மற்றும் புகைப்படங்களை நீக்குமாறு விமான ஊழியர்கள் எங்களை வற்புறுத்தினர். நான் மறுத்தபோது அவர்கள் எனது தொலைபேசியை பறித்துவிட்டனர்.
இவ்வாறு ஸ்ரீகாந்த் கூறினார்.
ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் புகைமூட்டம் ஏற்பட்டது குறித்து விரிவாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உள்நாட்டு விமானப் போக்குவரத்து இயக்கு நரகம் (டிஜிசிஏ) தற்போது உத்தர விட்டுள்ளது.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் விமானங்களில் அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் ஏற்பட்டு வருவதையடுத்து அந்த நிறுவனம் 50 சதவீத விமானங்களை மட்டுமே இயக்க வேண்டும் என டிஜிசிஏ ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத் தக்கது.