தீபாவளி வந்தாச்சு, புது துணி எடுத்து, பலகாரமெல்லாம் செஞ்சு, பட்டாசு எல்லாம் வாங்கி அமர்க்களமாக கொண்டாட எல்லாரும் தயாரா இருப்பீங்க.
தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடிக்க ஆரம்பித்துவிடுவதால் ஒலியும், காற்றும் அதிக அளவில் மாசுபடுகிறது. தமிழக அரசு பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தை அறிவித்து வருகிறது… வாகனம், தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் புகையினால் தினமும் சுற்றுச்சூழல் மாசடைவதை விடவா வந்துவிடப்போகிறது. தீபாவளி அன்று ஒருநாள் மட்டும் வெடிக்கும் பட்டாசுகளால் அந்த அளவுக்கு மாசடைந்து விடுமா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பட்டாசுகளில் உள்ள நச்சு கனிமங்கள் என்ன?
இந்த கேள்விகளுக்கான பதில்களை சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களிடம் கேட்டோம்.. அவர்கள் சொன்ன பதில்களும், கேள்விகளும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.
பட்டாசுகளில் உள்ள நச்சு கனிமங்கள் என்ன?
வாகனங்களின் புகையும், பட்டாசுகளின் புகையும் ஒன்றல்ல. பட்டாசுகளில் ஆர்செனிக், லித்தியம், காட்மியம், கந்தகம், பாதரசம் போன்ற கன உலோகங்களின் நச்சுக்களும், பேரியம், பொட்டாசியம் நைட்ரேட், நைட்ரிக் ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு, அலுமினியம், தாமிரம் போன்ற உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் பல்வேறு நச்சு சேர்மங்களும் இருக்கின்றன. இவையெல்லாம் சாதாரண நாட்களில் ஏற்படும் தொழிற்சாலையிலிருந்து, வாகனங்களிலிருந்து வெளிவரும் புகைகளை விட அதிகளவான மாசை ஏற்படுத்துகின்றன.
வாழ்வாதாரம் என்னவாகும் ?
பட்டாசு தொழிலை வாழ்வாதாரத்துக்காக நம்பி பட்டாசு தொழிலாளர்கள் இருக்கின்றனர். பட்டாசு வியாபாரம் ஆகவில்லை என்றால் அவர்கள் வாழ்வாதாரம் என்னவாகும்?
பட்டாசு தயாரிப்பில் ஈடுபடும் தொழிலாளிகள் எந்நேரமும் பயத்தில் இருக்க வேண்டும். எப்போது விபத்து ஏற்படும் என்று தெரியாது. மாதத்திற்கு குறைந்தது 5 முதல் 6 தொழிலாளிகளாவது இறக்கின்றனர். தொழிலாளர்களின் உயிருக்கே உத்தரவாதம் இல்லாத போது, அவர்களின் வாழ்வாதாரத்துக்காக பட்டாசு வெடிக்கிறோம் என்று கூறுவதெல்லாம் அபத்தம். பட்டாசு தொழிலாளர்களுக்கு மாற்று வாழ்வாதாரத்தை அரசு உறுதிப்படைத்த வேண்டும்.

பசுமைப் பட்டாசு என்றால் என்ன?
சாதாரண பட்டாசை விட பசுமை பட்டாசு சுற்றுச்சூழலை குறைந்தளவு மாசுபடுத்தும். பசுமை பட்டாசை Counsil of Scientific and Industrial Research- National Environment engineered Institute உருவாக்கியது.
சாதாரண பட்டாசுக்கும் பசுமை பட்டாசுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?
பட்டாசுகளில் உள்ள கடுமையான உலோகங்கள் எல்லாமே நியூரோ டாக்ஸிக். பசுமை பட்டாசுகளில் கடுமையான உலோகங்கங்களான லித்தியம், ஆர்சனிக், பேரியம், கந்தகம் போன்றவை இருக்காது. சாதாரண பட்டாசுகள் 160 டெசிபல் சத்தத்தை ஏற்படுத்தும். பசுமை பட்டாசு 110 டெசிபல் அளவிலான சத்தமே ஏற்படுத்தும். சாதாரண பட்டாசுகள் வெடித்தால் ஏற்படும் வண்ண ஒலிகள் பசுமை பட்டாசில் பெரிதளவு இருக்காது. ஆனால் இரண்டுமே சூழலுக்கு கேடுதான். சாதாராண பட்டாசை விட பசுமை பட்டாசு ஓரளவு சூழலுக்கு உகந்தது.

பசுமை பட்டாசை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் என்ன?
பட்டாசுகள் பெட்டி கடையில் கூட விற்கிறார்கள். பட்டாசுகள் விற்பனை எங்கு விற்கப்படுகிறது, யாரால் விற்கப்படுகிறது, போன்றவை கண்காணிக்கபடுவதில்லை. இதனால் பசுமை பட்டாசு என்று கூறி சாதாரண பட்டாசுகளை விற்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
பட்டாசுகளுக்கு தடை விதித்த மாநிலங்கள்..
டெல்லியில் ஜனவரி 2023 ஆண்டு வரை சாதாரண பட்டாசுகள் விற்பனை செய்ய தடை விதித்துள்ளது. ஹரியானாவில் பசுமை பட்டாசுகள் மட்டுமே வெடிக்க அனுமதி. மேற்கு வங்கத்திலும் பசுமை பட்டாசுக்கு மட்டுமே அனுமதி அழங்கப்பட்டுள்ளது.
பட்டாசு வெடிப்பதால் யாரெல்லாம் பாதிக்கப்படுகின்றனர்?
பட்டாசு வெடிப்பதால் பறவைகள், விலங்குகள், அதிகமாக பாதிக்கப்படுகின்றன. கர்ப்பிணி பெண்கள், சுவாசப் பிரச்னை உள்ளவர்கள், நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்னை உள்ளவர்கள், ஒவ்வாமை உள்ளவர்கள், இதய நோயாளிகள் பாதிப்படைகிறார்கள். பட்டாசு வெடித்த குப்பைகளை அகற்றுவதால் தூய்மை பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகமாகின்றன.