புதுக்கோட்டை பெரியார் நகரைச் சேர்ந்தவர் பாண்டித்துரை. இவர் நெடுஞ்சாலைத்துறை அரசு ஒப்பந்ததாரராக இருக்கிறார். கடந்த அ.தி.மு.க ஆட்சி, தற்போதைய தி.மு.க ஆட்சி என தமிழகம் முழுவதும் ஊர் பெயர் பலகை வைத்தல், சாலையில் பிரதிபலிப்பு பலகை வைத்தல் உள்ளிட்ட பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறார்.
ஒப்பந்தபணி எடுத்து செய்ததில் தரமற்ற பொருட்களை உபயோகப்படுத்தியதும், வரி ஏய்ப்பு செய்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் பேரில், புதுக்கோட்டை பெரியார் நகரில் உள்ள பாண்டித்துரையின் வீடு மற்றும் அலுவலகங்களில் சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த வருமானவரித்துறை அதிகாரிகள் கடந்த 12ம் தேதி சோதனையினை தொடங்கினர். விடிய,விடிய ரெய்டு நடைபெற்ற நிலையில், 13-ம் தேதியும் தொடர்ந்தது.

இதில், முக்கிய ஆவணங்கள் சிக்கிய நிலையில், 14-ம் தேதியும் ரெய்டு தொடர்ந்தது. இதற்கிடையே கோயம்புத்தூரில் குடும்பத்தினருடன் வசித்து வரும் பாண்டித்துரை புதுக்கோட்டைக்கு வரவைக்கப்பட்டார். அலுவலகத்தில் அவரிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் நீண்ட நேரம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். தொடர்ந்து, புதுக்கோட்டையில் உள்ள அவரின் வீட்டிற்கும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். 3 நாள்கள் நடைபெற்ற இந்தச் சோதனையில் முக்கிய ஆவணங்களின் கோப்புகள் கைப்பற்றப்பட்டிருக்கிறது. மேலும், கட்டுக்கட்டாக பணம், நகை உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த ஆவணங்களைக் கைப்பற்றிய நிலையில் தான், பாண்டித்துரையை வரவைத்து விசாரணையை நடத்தியிருக்கின்றனர் எனவும் சொல்லப்படுகிறது.
கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் அட்டைப்பெட்டிகளுக்குள் வைக்கப்பட்டு, 3க்கும் மேற்பட்ட அட்டைப்பெட்டிகளை வேனில் ஏற்றிச் சென்றனர். இதே போல், அதே பகுதியில் உள்ள பாண்டித்துரையின் மேலாளர் பீட்டர் என்பவரின் வீடு, சிப்காட் பகுதியில் அமைந்துள்ள 2 தொழிற்சாலைகளிலும் நடைபெற்ற சோதனையிலும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
நெடுஞ்சாலைத்துறையில் ரோடுரோலர் ஓட்டுநர் பணி செய்து வந்த இவரது தந்தை, கடந்த சில் ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், வாரிசு அடிப்படையில் நெடுஞ்சாலைத்துறையில் இளநிலை உதவியாளர் பணி, அதன்பிறகு உதவிக் கேட்ட அலுவலகத்தில் உதவியாளர் பணி கிடைத்திருக்கிறது. ஆனாலும், வேலையினை ராஜினாமா செய்துவிட்டு நெடுஞ்சாலைத்துறை அரசு ஒப்பந்ததாரராகியிருக்கிறார்.

கோயம்புத்தூரில் வசித்து வரும் இவர், புதுக்கோட்டையில் மட்டுமல்லாது, கோவையிலும் பல்வேறு சொத்துக்களை வாங்கிக் குவித்திருக்கிறார்.
அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் தொடர்ந்து, மூன்று நாள்களாக நடைபெற்ற வருமானவரித்துறை சோதனை புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.