வாஷிங்டன் : ”அமெரிக்க டாலர் மதிப்பு வலுப்பெற்று இருக்கும் நேரத்திலும், இந்திய ரூபாயின் மதிப்பு நிலையாக உள்ளது. இந்தியாவின் அடிப்படை பொருளாதாரம் வலுவாக உள்ளது.
”உலகின் பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது பணவீக்கம் குறைவாகவே உள்ளது,” என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கியின் ஆண்டு கூட்டத்தில் பங்கேற்க, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்கா வந்துள்ளார்.
வாஷிங்டனில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற பின், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை கட்டமைப்புகள் நன்றாக உள்ளன. அன்னிய செலாவணி கையிருப்பு நன்றாக உள்ளது. பணவீக்கமும் சமாளிக்கக்கூடிய அளவில் உள்ளது என்பதை திரும்பத் திரும்ப கூறி வருகிறேன்.
உலகின் பல்வேறு நாடுகள் கடுமையான பண வீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. மேற்காசிய நாடான, துருக்கியில் பண வீக்கம் இரட்டை இலக்கத்தில் உள்ளது. பல்வேறு வெளிப்புற காரணிகளில் இந்தியாவும் பாதிக்கப்பட்டது.
ஆனால், நாம் ஒவ்வொரு முறையும் சரியான நேரத்தில் எடுக்கும் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக, பண வீக்கத்தை குறைந்தபட்சம் இந்த நிலையில் வைத்திருக்க முடிகிறது. 6 சதவீதமாக இருக்கும் பண வீக்கத்தை 4 சதவீதமாக குறைத்தால் நன்றாக இருக்கும்; அதற்கான முயற்சியில் ஈடுபட்டு உள்ளோம்.
எனவே, உலகின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும்போது நம் நிலை நன்றாகவே உள்ளது. அதற்காக அதை கொண்டாட வேண்டும் என சொல்லவில்லை. நம் நிலை சிறப்பாகவே உள்ளது என்பதே உண்மை. மேலும், நிதிப் பற்றாக்குறை குறித்து மிகவும் விழிப்புடன் இருக்கிறேன்.
அமெரிக்க டாலரின் வேகமான வளர்ச்சியால், மற்ற நாடுகளின் கரன்சிகள் சரிவை சந்தித்து வருகின்றன. அந்த வகையில் தான் இந்திய ரூபாய் மதிப்பும் குறைந்துள்ளது. ஆனால், பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது, டாலரின் வளர்ச்சிக்கு எதிராக நம் ரூபாய் நிலையாகவே உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
அதிரடி நடவடிக்கை!’
வங்கி துறைகளில் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களில் ஊடுருவி, ‘ஸ்பாமிங்’ எனப்படும், தொடர் அழைப்புகள், குறுஞ்செய்திகள் அனுப்பும் விவகாரம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு நிர்மலா சீதாராமன் கூறியதாவது:பழைய தகவல் பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ளது. புதிய மசோதா விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. தேவையற்ற தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள் அனுப்புவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும், காளான்களை போல அவர்கள் முளைத்து வருகின்றனர். இவர்களை கண்டறிந்து களைய கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆந்திரா, தெலுங்கானாவில் கடன் செயலி வாயிலாக மோசடி செய்த வெளிநாட்டு நபர்கள் கைது செய்யப்பட்டதும் இந்த அடிப்படையில் தான்.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement