கோவை: அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கம், காஞ்சிபுரம், திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் கொலு கொண்டாட்டம் போட்டி நடத்தப்பட்டது. வாசகர்கள் தங்களது வீடுகளில் வைத்துள்ள கொலு கண்காட்சியை புகைப்படம் எடுத்து பெயர், முகவரி, தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களுடன் மின்னஞ்சல் மூலமாக அனுப்பினர்.
நடுவர் குழுவின் சார்பில் சிறந்த கொலு படங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதன்படி, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த உஷா, ராதா ரங்கராஜன், கீதா ராமசுந்தர், ஸ்ரீகலா ராமநாதன், சுப்பிரமணியன் நடராஜன்,வேலுப்பிள்ளை, தேவசேனா மகேஸ்வரன், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹேமலதா, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெகதீசன் ஆகிய 9 வாசகர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான பரிசளிப்பு விழா கோவை ராஜவீதியில் உள்ள காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா நெசவாளர் பட்டு கூட்டுறவு சங்க விற்பனை அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது.
இதில் விற்பனைப் பிரிவின் பொறுப்பாளரும், முதுநிலை விற்பனையாளருமான ஆர்.கமலம், உதவி விற்பனையாளர் வி.அருள்வடிவு ஆகியோர் 9 வாசகர்களுக்கும் தலா ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள பரிசுக் கூப்பன், நண்டு பிராண்டு கைக்குட்டை ஒரு செட், சாம்பிராணி பெட்டி ஆகியவற்றை வழங்கினர். ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள பரிசுக் கூப்பனில் காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கம் திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்கம் ஆகியவற்றின் சார்பில் தலா ரூ.1000 மதிப்புள்ள பரிசுக் கூப்பன்கள் வைக்கப்பட்டிருந்தன. வாசகர்கள் இந்த கூப்பனை மேற்கண்ட விற்பனை நிலையங்களில் பயன்படுத்தி பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டது.