கடமலைக்குண்டு பகுதியில் வரத்து அதிகரிப்பால் தேங்காய் விலை குறைவு: விவசாயிகள் கவலை

வருசநாடு: கடமலை-மயிலை ஒன்றியத்தில், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, குமணந்தொழு, மூலக்கடை, முத்தாலம்பாறை, வருசநாடு உள்ளிட்ட பகுதிகளில் 100 ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு உற்பத்தியாகும் தேங்காய் காங்கேயம், திருச்சி, பாண்டிச்சேரி, சென்னை மட்டுமல்லாமல், டெல்லி, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடமலை-மயிலை ஒன்றியத்தில் கனமழை பெய்தது. அதன் காரணமாக தற்போது தேங்காய் உற்பத்தி அதிகரித்துள்ளது. உற்பத்தி அதிகரித்ததன் காரணமாக தேங்காய் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை 1 தேங்காய் 12 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது ரூ.7 முதல் 10 வரை விற்பனையாகிறது. விலை குறைவுக்கு ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தேங்காய் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுவதுதான் காரணம் என தேங்காய் வியாபாரிகள் தெரிவித்தனர்.

போதுமான விலை இல்லாதபோது விவசாயிகள் தேங்காய்களை உடைந்து அதனை வெயிலில் காயவைத்து எண்ணெய் தயாரிப்பிற்காக ஏற்றுமதி செய்வது வழக்கம். ஆனால் தற்போது கொப்பரை தேங்காயின் விலையும் குறைந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் கடமலை-மயிலை ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் குடோன்களில் தேங்காய்கள் தேக்கமடைந்து காணப்படுகிறது.

எனவே கடும் நஷ்டத்தை சந்தித்துள்ள தேங்காய் விவசாயிகளுக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் தேங்காய்க்கு நிலையான விலை நிர்ணயம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.