குழந்தை திருமணத்தை அறவே ஒழிக்க வேண்டுமென்பதில் சமூகம் முழு முனைப்போடு செயல்பட்டுவருகிறது. ஆனால் கடலூர் மாவட்டம் சிதம்பரம் கோயில் பழங்கால நடைமுறைப்படி இன்னமும் குழந்தை திருமணத்தை செய்துவைப்பதாக தொடர்ந்து பேச்சு எழுந்தது. அப்படி, சமீபத்தில் சிதம்பரம் நடராஜர் கோயிலின் தீட்சிதர் ராஜரத்தினம் என்பவர் தனது மகளை (15 வயது) கடந்த திருமணம் செய்து வைத்திருக்கிறார்.
இந்தத் தகவல் கசிந்ததை அடுத்து சமூக நலத்துறை அலுவலர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் காவல் துறையினர் விசாரித்தபோது குழந்தைத் திருமணம் செய்தது உறுதியானது. அதுதொடர்பான புகைப்பட ஆதாரமும் கிடைத்தது. இதனையடுத்து குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் பொது தீட்சிதர் செயலாளர் ஹேமச்சந்திரா, தீட்சிதர் ராஜரத்தினம், அவரது தந்தை வெங்கடேஸ்வர தீட்சிதர் கைது செய்யப்பட்டனர்.
இந்தக் கைதை கண்டித்து சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் நேற்று மாலை முதல் நள்ளிரவுவரை சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இவ்வாறு செய்ய வேண்டாமென எச்சரித்தும் அவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிடவில்லை. மேலும் காவல் துறையினருடன் தீட்சிதர்கள் தள்ளுமுள்ளுவிலும் ஈடுபட்டனர்.
எனவே நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர தீட்சிதர்கள் சிலரை காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அதிகளவு காவல் துறையினரும் அங்கு குவிக்கப்பட்டனர். இதனையடுத்து தீட்சிதர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.
முன்னதாக, நான்கு சிறுமிகளுக்கு ஏற்கனவே திருமணம் செய்த வழக்கில் பல தீட்சிதர்கள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. குழந்தை திருமணத்தை ஒழிக்க வேண்டும் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் வலியுறுத்திக்கொண்டிருக்கும் தீட்சிதர்களின் இப்படிப்பட்ட செயல் விரும்பத்தகாத ஒன்றாகவே கருதப்படுகிறது.