புதுடில்லி: நாடு முழுவதும், 75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கி மையங்களை பிரதமர் மோடி இன்று(அக்.,16) ‛ வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் நாட்டுக்கு அர்பணித்தார்.
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில் 75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கி மையங்கள் ஏற்படுத்தப்படும் என 2022-23 மத்திய பட்ஜெட் உரையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். அதன் படி, பிரதமர் மோடி இந்த திட்டத்தை, நாட்டுக்கு அர்பணித்தார்.
நிகழ்ச்சியில் நரேந்திர மோடி பேசியதாவது: சாமானிய மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும் பிரசாரதத்தில் டிஜிட்டல் பேங்கிங் முக்கியமான ஒன்று. டிஜிட்டல் உள்கட்டமைப்புடன் அதிகம் பேருக்கு சேவை வழங்கும் சிறப்பு வங்கித்துறையாக இது உள்ளது.இந்த சேவைகள் காகிதப்பணி மற்றும் பிற தொந்தரவுகள் இல்லாமல் இருக்கும். வலுவான டிஜிட்டல் வங்கி பாதுகாப்புடன் பல வசதிகள் இருக்கும். இரண்டு விஷயங்களில் தீவிரமாக பணியாற்றினோம். அதில் முதலாவதாக, வங்கி நடைமுறையை மேம்படுத்துவதுடன், அதனை வலுப்படுத்தி வெளிப்படைத்தன்மை கொண்டு வருவது. இரண்டாவதாக நிதிநிலை வலுவடைய செய்வது. ஏழைகளின் வீட்டு வாசலுக்கு வங்கிகளே செல்லும் என முடிவு செய்தோம்.

டிஜிட்டல் மயமாக்கல் மூலம் சமூக பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்தியா முன்னணியில் இருப்பதாக உலக வங்கி கூறுகிறது. வங்கிகளே ஏழைகளின் வீட்டு வாசலுக்குச் செல்லும் என்று முடிவு செய்தோம்.இதற்கு, நாம் முதலில் ஏழைகள் மற்றும் வங்கிகளுக்கான தூரத்தை குறைக்க வேண்டும். உடல் தூரத்தையும் உளவியல் தூரத்தையும் குறைத்தோம். தொலைதூர பகுதிகளுக்கு வங்கிகளை கொண்டு செல்வதற்காக, அதிக முக்கியத்துவம் தரப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement